காத்தான்குடியில் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை பழுதடையாமல் வைப்பதற்காக வாங்கப்பட்ட குளிரூட்டி கிழக்கு மாகாணத்துக்கு பயனளித்துள்ளது. கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை (ஜனாஸா) தற்காலிகமாக வைத்து பாதுகாப்பதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களி சம்மேளனத்தினால் குளிரூட்டியொன்று வாங்கப்பட்டது.

சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியிலுள்ள மூன்று பிரதான ஜும்ஆ பள்ளிவாயல்களின் நிதிப் பங்களிப்புடன் இந்தக் குளிரூட்டி வாங்கப்பட்டது. இக்குளிரூட்டி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு அதில் பல இடங்களிலும் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாசாக்கள் அடக்கம் செய்யும் வரை பாதுகாத்து வைக்கப்பட்டன.

பின்னர் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்ய ஆரம்பிக்கப்பட்டதையடுத்து இந்தக் குளிரூட்டியில் வைக்கப்பட்ட சடலங்களும் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. பின்னர் கிண்ணியாவில் கடந்த மாதம் கொவிட் தொற்று தீவிரமடைந்த போது அங்கு கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் வரை சடலங்களை பாதுகாப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் காத்தான்குடியிலிருந்த இந்தக் குளிரூட்டியை தந்துதவுமாறு கோரிக்கை விடுத்த போது, இக்குளிரூட்டி தற்காலிகமாக கிண்ணியாவுக்கு வழங்கப்பட்டது. பின்னர் கிண்ணியாவில் நிலைமை சுமுகமானதையடுத்து மீளவும் இக்குளிரூட்டி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் கடந்த 28.06.2021 அன்று மீளவும் கையளிக்கப்பட்டது.

ஒன்றரை மாதத்தின் பின்னர் மீளவும் இக்குளிரூட்டியை கிண்ணியா சமூக நிறுவனங்கள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் ஒப்படைத்தன. கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.மஹ்தி, கிண்ணியா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர் எம்.நசார் ஆகியோர் இதனை காத்தான்குடிக்கு கொண்டு வந்து மீளக் கையளித்தனர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரமுகர் மர்சூக் அகமட் லெவ்வையிடம் அது கையளிக்கப்பட்டது. இதில் சம்மேளன செயலாளர் மௌலவி சபாஹிர் உட்பட சம்மேளன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்குளிரூட்டியை கிண்ணியாவுக்கு வழங்கியமைக்காக கிண்ணியாவிலுள்ள சிவில் சமூக நிறுவனத்தினர், நகர சபை மற்றும் அரசியல் பிரமுகர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் காத்தான்குடி மக்களுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி