பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு முறை, அதாவது 1965 மற்றும்
1971ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் போரில் ஈடுபட்டது.
பனிப்போர் காலத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பில் பாகிஸ்தானும் ஓர் அங்கம் வகித்தது. அந்த காலத்தில்தான் சோவியத் யூனியன் 1979ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தாக்கியது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அதிகாரத்தில் இருந்து நீக்கி ஆப்கானிஸ்தானில் கம்யூனிச ஆட்சியை நிறுவ வேண்டும் என்று சோவியத் யூனியன் விரும்பியது.
மற்றொருபுறமோ, அமெரிக்கா கம்யூனிச ஆட்சிகளைக் கொண்ட நாடுகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை முறியடிக்க, அமெரிக்கா பாகிஸ்தானின் உதவியை நாடியது. அதற்கு பதிலாக அமெரிக்காவிடம் இருந்து பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை பாகிஸ்தான் பெற்றது.
உத்தி ரீதியிலான தேவைகளுக்காகவே பாகிஸ்தானிடம் அமெரிக்கா நெருக்கம் காட்டியது. அந்த தேவைகள் முடிவற்றதாக இருக்கவில்லை.
அமெரிக்காவாலும் பாகிஸ்தானாலும் ஆப்கானிஸ்தானில் ஊக்குவிக்கப்பட்ட அடிப்படைவாதிகள் அந்த நாடுகளுக்கே சவாலாக மாறினார். அந்த சவால் இன்றும் நிலவுகிறது.
1962ஆம் ஆண்டு இந்தியாவை சீனா தாக்கியது. மூன்று ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் இந்தியாவை தாக்கியது. ஆனால் இந்தியாவைப் பற்றிய அதன் முன் அனுமானம் தவறாகிவிட்டது.
பாகிஸ்தானின் மதிப்பீடு தவறானது ஏன்?
சீனாவுடனான போர் முடிந்த நிலையில், இந்தியாவின் மன உறுதி குலைந்திருக்கும் என்பதால் எளிதில் அதனை வெற்றிக் கொண்டுவிட முடியும் என்று பாகிஸ்தான் அப்போது நினைத்தது.
ஆனால் பாகிஸ்தான் அதன் நோக்கத்தில் வெற்றி அடையவில்லை. 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது பாகிஸ்தானுக்கு எந்த விதமான ராணுவ உதவியையும் அமெரிக்கா வழங்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவுக்கும் அந்த நாடு ஆதரவாக இல்லை.
ஆனால் 1971ஆம் ஆண்டு அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவி புரிந்தது. வியட்நாமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய யூ.எஸ்.எஸ். எண்டர்ப்ரைசஸ் என்ற போர்க்கப்பலை அமெரிக்கா வங்கக் கடலுக்கு அனுப்பியது.
தேவை இருப்பின் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவ முன்வரும் என்ற செய்தியை சோவியத் யூனியனுக்கு அறிவிக்கவே இதை செய்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்கா அந்த போரில் நேரடியாக எந்த தலையீடும் செய்யவில்லை என்ற போதும், ராஜ்ஜீய ரீதியாகவும் மன அளவிலும் பாகிஸ்தானுடன் துணை நின்றது அமெரிக்கா.
1971ஆம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி சோவியத் யூனியனுடன், அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் (India-Soviet Treaty of Peace, Friendship and Cooperation) கையெழுத்திட்டார்.
அந்த ஒப்பந்தத்தின்படி, போர் சூழல் ஏற்படும் போது இந்தியாவுக்கு தேவையான ராஜ்ஜீய மற்றும் ஆயுத ரீதியிலான உதவிகளை வழங்க வாக்குறுதி கொடுத்தது சோவியத் யூனியன்.
கிழக்கு பாகிஸ்தானில் நிலவிய நெருக்கடியால் இந்தியாவும் பாகிஸ்தானுக்கும் 1971ஆம் ஆண்டு 13 நாள் போர் நிலவியது. இதற்குப் பின்பே கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக உருப்பெற்றது. அன்றைய பாகிஸ்தானை இரண்டு நாடுகளாக பிரிப்பதில் வெற்றி கண்டது இந்தியா.
மேற்கத்திய நாடுகளின் கூட்டணியில் பாகிஸ்தான் இடம் பெற்றிருந்த போதும், பாகிஸ்தான் போரில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவி மட்டுமின்றி வளைகுடாவில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் ஆதரவும் இருந்தது.
பனிப்போர் முடிவடைந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் கார்கிலை தாக்கியது. பிறகு, அந்த தாக்குதலில் இருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்.
நான்காவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு
இந்த மூன்று போர்களுக்குப் பிறகு உலகம் முழுமையாக மாறிவிட்டது. சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்து தற்போது ரஷ்யாவே எஞ்சியிருக்கிறது.
இரு துருவங்களாக இருந்த உலகம் தற்போது ஒற்றை துருவமாக மாறிவிட்டது. ஆனால் இரண்டாம் துருவமாக திகழ்கிறோம் என்று சீனா வலிமையான கோரல்களை முன்வைக்கிறது.
மற்றொருபுறம், இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறிவிட்டது. மாறிவரும் உலகில் தனக்கான இடத்தை இந்தியா தக்கவைத்துள்ளது. ஆனால் பொருளாதாரத்திற்காக பாகிஸ்தான் செளதி அரேபியா, சீனா மற்றும் பல உலக நிறுவனங்களை நம்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானை இனி யார் ஆள வேண்டும் என்பது குறித்து அமெரிக்கா தற்போது கவலை கொள்வதில்லை என்பதால் முன்பு போல் பாகிஸ்தானின் உதவியும் இனி அதற்கு தேவையில்லை.
இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான, பரஸ்பர உறவு என்பது அவ்விரு நாடுகளும் பரஸ்பர நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதைச் சார்ந்தே இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவுடனான இந்தியாவின் இரு நாட்டு வர்த்தக மதிப்பானது 100 பில்லியன் டாலர்களைவிட அதிகம்.
வளைகுடாவில் அமைந்துள்ள முக்கிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இந்தியாவின் வர்த்தகம் 100 பில்லியன் டாலர்கள் மதிப்பைக் கடந்துள்ளது. செளதி அரேபியாவுடனான ஆண்டு வர்த்தக மதிப்பானது 50 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது.
2022ஆம் ஆண்டு யுக்ரேன் மீது ரஷ்யா முழு வீச்சில் போர் தொடங்கிய பின், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக மதிப்பு 65 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
இந்தியாவுடன் பெரிய அளவில் வர்த்தக உறவில் ஈடுபட்டுள்ள நாடுகளில், முதல் 3 இடத்தில் உள்ள நாடுகளும் செளதி அரேபியாவும் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வருகின்றன அல்லது கடந்த காலத்தில் நட்புறவில் இருந்துள்ளன.
ஆனாலும் அந்த நாடுகளுடனான பாகிஸ்தானின் இரு நாட்டு வர்த்தக மதிப்பானது குறைவாகவே உள்ளது.
இந்தியா போன்ற பெரிய சந்தையை புறக்கணித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்க எந்த நாடும் விரும்பாது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது செளதி அரேபியா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த நாட்டின் வர்த்தக நலன்கள் இந்தியாவுடன் தொடர்புடையது என்று அப்போது பாகிஸ்தான் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்துத்துவா பிம்பத்தைக் கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோதியை செளதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் சகோதரர் என்று அழைத்தார்.
பனிப்போருக்கு பிறகான உலகில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்தது. ஆனால் பாகிஸ்தானால் அதன் பழைய முக்கியத்துவத்தைக் கூட தக்க வைக்க இயலவில்லை.
துருக்கி யாருடன் நிற்கிறது?
இந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்த பிறகு, பரிவர்த்தனை சார்ந்த உறவுகள் முக்கியத்துவம் பெற துவங்கின.
பனிப்போர் காலத்தில் யார் யாருடன் இருந்தார்கள், யார் யாருக்கு எதிராக இருந்தார்கள் என்பதைக் காட்டிலும், தற்போதைய சூழலில் அமெரிக்காவிடம் இருந்து யார் அதிகம் வாங்குகிறார்கள், அமெரிக்காவுக்கு அதிகம் யார் விற்பனை செய்கிறார்கள் என்பதே முக்கியமாக உள்ளது.
டிரம்பும் கூட ரஷ்யாவுடன் நல்ல உறவை மேம்படுத்த விரும்புகிறார். ஆனால் பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரம் காரணமாக எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கான அல்லது விற்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள். தற்போது அதிகரித்து வருகின்ற பதற்றமான சூழலில், சர்வதேச அளவில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் மூலமாக யார் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள், யார் நடுநிலைத் தன்மையோடு இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலும்.
மே 8 இரவு, துருக்கி அதிபர் எர்துவான் எக்ஸ் தளத்தில் எழுதிய பதிவொன்றில், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வளர்ந்து வரும் பதற்றத்தைக் கண்டு வருத்தம் அடைந்துள்ளோம். ஏவுகணை தாக்குதல்களால் பொதுமக்கள் பலர் தங்களின் உயிரை இழந்துள்ளனர். பாகிஸ்தானும் அதன் மக்களும் எங்களின் சகோதரர்களைப் போன்றவர்கள். அவர்களுக்காக நாங்கள் அல்லாவை பிரார்த்திக்கிறோம்," என்று கூறியிருந்தார்.
"பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃபுடன் நான் தொலைபேசி வாயிலாக உரையாடினேன். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மோசமான தீவிரவாதத் தாக்குதலை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். சிலர் இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்க விரும்புகின்றனர். ஆனால் பதற்றத்தைக் குறைத்து பேச்சுவார்த்தையை தொடங்கி வைக்க துருக்கி விரும்புகிறது. நிலைமை மோசமடைவதற்கு முன்பு இருநாடுகளும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்," என்று எர்துவான் கூறுகிறார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை எர்துவானின் கருத்து உறுதிப்படுத்துகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானும் சர்வதேச விசாரணையை கோருகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர்களுக்காக எர்துவான் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர்களை தன்னுடைய சகோதரர்கள் என்றும் அவர் கூறினார்.
எர்துவான் துருக்கியின் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, பாகிஸ்தானுடனான ராணுவ உறவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவுடனான இடைவெளி நீடிக்கிறது.
சன்னி இஸ்லாமியர்கள் பெரும்பான்மை நாடுகளான துருக்கியும் பாகிஸ்தானும் இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றன.
இருப்பினும் இந்தியாவுடனான துருக்கியின் இரு நாட்டு வர்த்தகம் ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. பாகிஸ்தானுடனான வர்த்தகம் ஒரு பில்லியன் டாலர்களையே தாண்டியுள்ளது.
ஆனால் மற்றொரு புறம் செளதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அதெல் அல் ஜூபைர் வியாழக்கிழமை இந்தியா வந்தார். முன்னறிவிப்பு ஏதுமின்றி மேற்கொள்ளப்பட்ட பயணம் இதுவாகும்.
இந்தியா வந்த அவர், பிரதமர் மோதி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தியப் பயணம் முடிந்த பிறகு அவர் பாகிஸ்தான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அரக்சியும் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார். அவர் இந்தியா வருவதற்கு முன்பாக பாகிஸ்தான் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஒரு திட்டமிட்ட பயணமாகும்.
ஜூபைரின் வருகையும் மோதியுடனான சந்திப்பும் அசாதாரணமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மோதி செளதிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட சமயத்தில், ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதல் நடைபெற்றது. அதில் 26 நபர்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மோதி தன்னுடைய அரசுமுறைப் பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாடு திரும்பினார்.
செளதியும் இரானும் என்ன செய்ய விரும்புகின்றன?
செளதி இணை அமைச்சர் அதெல் அல் ஜூபைரை இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசிய பிறகு, எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டார் ஜெய்சங்கர்.
"செளதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அதெல் அல் ஜூபைரை சந்தித்துப் பேசினேன். தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்த புரிதலை அவருடன் பகிர்ந்து கொண்டேன்" என்று குறிப்பிட்டார்.
ஏப்ரல் 30 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட செளதி அரேபியா, அமைதியை வலியுறுத்தியது. மேலும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. தான் எந்த ஒரு நாட்டுக்கும் ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதையே இந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
1965ஆம் ஆண்டு நடைபெற்ற போராக இருந்தாலும் சரி, 1971-ல் நிகழ்ந்த போராக இருந்தாலும் சரி பாகிஸ்தானுடன் செளதி எப்போதும் துணை நின்றது.
1998ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் ஐந்து அணு ஆயுத பரிசோதனைகளுக்கு பதிலடி தரலாமா வேண்டாமா என்று பாகிஸ்தான் தீவிர ஆலோசனையில் இருந்த போது, செளதி அரேபியா நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணெயை பாகிஸ்தானுக்கு இலவசமாக அளிப்பதாக வாக்குறுதி அளித்தது.
பனிப்போர் காலத்திலும் செளதி அரேபியா மேற்கத்திய நாடுகளுடன் இருந்தது. எனவே பாகிஸ்தானுடனான உறவில் செளதிக்கு எந்த விதமான பிரச்னையும் இருந்திருக்கவில்லை.
ஆனால் தற்போது உலகம் மாறிவிட்டது. பாகிஸ்தான் மீதான மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறையும் மாற்றம் கண்டுள்ளது.
இந்தியா மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய வட்டத்தில் இருக்கின்ற சூழலில், பாகிஸ்தானுடனான நம்பிக்கையின்மையும் அதிகரித்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் மற்றும் செளதிக்கு இடையிலான உறவும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பக்கமே செளதி அரேபியா இருந்தது. ஆனால் 2019-ஆம் ஆண்டு இந்தியா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்த போது செளதி அரேபியா நடுநிலைத்தன்மையோடு செயல்பட்டது.
அன்றைய இம்ரான் கான் ஆட்சியில், வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த ஷா மஹ்மூத் குரேஷி, செளதியின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்தார்.
இரானின் நிலைப்பாடு என்ன?
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானையே இரானும் ஆதரித்தது. இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியும் கூட இந்திய முஸ்லீம்களின் நிலை குறித்து குரல் கொடுத்தார்.
ஆனால் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றத்தைக் குறைக்க மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எந்த நாட்டுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை இரான் எடுக்கவில்லை.
இந்திய வருகையின் போது இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அரக்சி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தார்.
சந்திப்புகளுக்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்தியாவும் இரானும் வரலாறு மற்றும் கலாசார உறவுகளைக் கொண்டுள்ளது. இருநாடுகள் இடையிலான கூட்டு ஆணையத்தின் 20வது அமர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்த இது பொன்னான வாய்ப்பு. சபஹார் துறைமுகம் தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, தெற்காசியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்றவையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பதற்றமான சூழலை பேச்சுவார்த்தைகள் மூலம் குறைக்க வேண்டும்," என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இரானின் வெளியுறவுத்துறை அமைச்சரும் அந்த நாடு யாருக்கு ஆதரவளிக்கிறது என்ற செய்தியை தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் நடுநிலைத்தன்மையுடன் இரான் இருப்பதைக் காட்டியுள்ளது.
இஸ்ரேலுக்கு இந்தியா வெளிப்படையாக ஆதரவளித்து வருகின்ற போதும் இதுவே இரானின் நிலைப்பாடாக உள்ளது.
இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே இருக்கும் பகைமை அனைவரும் அறிந்ததே. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் பல நேரங்களில், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.
தீவிரவாதத்திற்கான இந்தியாவின் போரில் பிரான்ஸ் துணை நிற்கும் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. ரஷ்யாவும் இதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் எல்லைக்குள் நடத்தப்பட்ட இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு சீனா கவலை தெரிவித்தது. ஆனால் தீவிரவாதத்திற்கு கண்டனத்தை பதிவு செய்தது.
அமெரிக்காவும் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது. மற்றொருபுறம், நிக்கி ஹேலி போன்ற தலைவர்கள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனாக் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
- பிபிசி தமிழ்