கொவிட் பெருந்தொற்று மற்றும் 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பிரதான நம்பிக்கையாகச் சுற்றுலாத் துறை விளங்குகிறது. விமான நிலையத்தில் வந்திறங்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து நாம் பல சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைகிறோம்.
ஆனால், அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளால் நாட்டின் சாதாரண மக்களின் கைகளுக்கும், கிராமத்துச் சிறு வியாபாரிகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உண்மையான டொலர் தொகை எஞ்சுகிறதா? ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) வெளியிட்டுள்ள புதிய பகுப்பாய்வொன்றின் ஊடாக இது குறித்துப் பாரதூரமான எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிபரங்களை விடவும் முக்கியமான விடயங்கள்
சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரிப்பதால் மாத்திரம் ஒரு நாட்டின் பொருளாதாரம் பலமடையாது என ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சுற்றுலா அமைப்பின் (UN Tourism) தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் ஆசிய–பசிபிக் பிராந்தியத்தின் சுற்றுலா வளர்ச்சி 6 சதவீதமாக இருந்த போதிலும், 2026 முற்பகுதியில் அது 1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய கிழக்கு யுத்த மோதல்கள், உக்ரைன் யுத்தம் மற்றும் எல்-நினோ (El Niño) காலநிலைத் தாக்கங்கள் இதற்குக் காரணமாக அமைந்துள்ளன. உலக நிலைமை இவ்வளவு நிச்சயமற்றதாக இருக்கும் தருணத்தில், வெறும் சுற்றுலா இலக்கங்களை மாத்திரம் நம்பியிருப்பது இலங்கை போன்ற பொருளாதாரத்திற்குக் கடும் அபாயமாகும்.
முதலீட்டாளர்கள் பின்வாங்குவதற்கான உண்மையான காரணம்
அரசாங்கத்தினால் சுற்றுலா இலக்குகளும் விளம்பர நிகழ்ச்சிகளும் அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு ஏற்ற உட்கட்டமைப்பு வசதிகளும் முதலீட்டுச் சூழலும் நாட்டிற்குள் உருவாக்கப்படவில்லை என ADB அறிக்கை சுட்டிக்காட்டுகிறது:
-
விமான நிறுவனங்களின் தீர்மானங்கள்: அதிகாரிகளுக்குப் புதிய விமானச் சேவைகள் தேவைப்பட்டாலும், விமான நிறுவனங்கள் புதிய பயண இலக்குகளை ஆரம்பிப்பது பயணிகளின் கோரிக்கை குறித்த துல்லியமான தரவுகள் இருந்தால் மாத்திரமேயாகும்.
-
அடிப்படை வசதிகள்: தடையற்ற மின்சாரம், நீர், திண்மக்கழிவு முகாமைத்துவம், இணைய வசதிகள் மற்றும் சட்டரீதியான ஸ்திரத்தன்மை இன்றித் தனியார் துறை முதலீடு செய்யத் தயங்குகிறது.
இந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், நாட்டின் சிறு வியாபாரிகள் நிர்க்கதியாகி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பாரிய நிறுவனங்களும் மாத்திரம் துறையின் இலாபத்தை அபகரித்துக் கொள்ளும் அபாயம் காணப்படுகிறது.
கிராமத்து வியாபாரிக்கு டொலர்கள் சென்றடைகின்றனவா?
சுற்றுலாத் துறையின் உண்மையான நன்மைகள் சிறிய ஹோட்டல் உரிமையாளர்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், போக்குவரத்துச் சேவைகள் மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்பாளர்கள் உள்ளடங்கலாகக் கிராமியச் சமூகத்திற்கே சென்றடைய வேண்டும்.
சுற்றுலாப் பயணி ஒருவர் நாட்டிற்கு வந்து செலவிடும் 100 டொலரில், அவருக்கு உணவாக வழங்கப்படும் மரக்கறிகள், பழங்கள் அல்லது ஹோட்டல் உபகரணங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய நேரிட்டால், அந்தப் பணம் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறிவிடும். எனவே, கிராமத்து உற்பத்தியாளருக்குக் கடன் வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்குவது அத்தியாவசியமானதாகும். தற்காலிக வேலைவாய்ப்புகளுக்குப் பதிலாக இளைய தலைமுறையினருக்கும் பெண்களுக்கும் நிரந்தரத் தொழில் வாய்ப்புகள் உருவாவதன் ஊடாகவே சுற்றுலாத் துறை சமூகத்திற்கு உணரக்கூடிய அபிவிருத்தியாக மாறும்.
சுற்றாடலைப் பாதுகாப்பது ஒரு பொருளாதார முதலீடாகும்
இலங்கையின் சுற்றுலா ஈர்ப்பின் இதயமாகத் திகழ்வது எமது வனப்பகுதிகள், கடற்கரையோரங்கள், வனஜீவராசிகள் மற்றும் தொன்மையான பாரம்பரியங்களாகும். முறையற்ற நிர்மாணங்கள் மற்றும் குப்பைப் பிரச்சினைகளால் இவ்வளங்கள் அழிவடைந்தால், சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவது நின்றுவிடும்.
தற்போது கூட ஆசிய அபிவிருத்தி வங்கியினால் தம்புள்ளை (சிகிரியா) மற்றும் திருகோணமலை போன்ற பிராந்தியங்களில் நிலைபேறான சுற்றுலா அபிவிருத்திக்காக 100 மில்லியன் டொலர் கருத்திட்டமொன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கசகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் இணைந்து முன்னெடுக்கும் 'அல்மாட்டி–பிஷ்கெக் பொருளாதார வழித்தடம்' ஊடாக வருடத்திற்கு 8.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக்கொள்ள முடிந்துள்ளதும் இவ்வாறான திட்டமிட்ட முதலீடுகளாலேயே ஆகும்.
பொறுப்புக்கூறலுடன் கூடிய புதிய பயணம்
நமது நாட்டின் 10 வருட தேசிய சுற்றுலாக் கொள்கை வெறும் ஆவணமாக மட்டுப்படுத்தப்படாமல் நடைமுறைச் செயற்றிட்டமாக அமைய வேண்டும். நாட்டிற்குள் எஞ்சும் டொலர் தொகை, சிறு வியாபாரிகளின் பங்களிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளின் தரம் ஆகியவற்றை அளவிடுவதற்கு அரசாங்கம் தெளிவான அளவுகோல்களைத் தயாரிக்க வேண்டும் என ADB பகுப்பாய்வு வலியுறுத்துகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஹோட்டல் அறைகள் நிரம்பினாலும், நாட்டின் பொருளாதார இடைவெளியை நிரப்ப முடிவது சரியான கொள்கைகள் மற்றும் உள்ளூர் வியாபாரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாக மாத்திரமேயாகும்.


