சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக ஜெய் ஷா இரண்டாவது பதவிக்காலத்திற்காகப் போட்டியின்றி மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி பணிப்பாளர் குழாம் மற்றும் குழுவுக் கூட்டங்கள் இந்தோனேசியாவின் பாலி நகரில் இடம்பெற்ற போதே இத்தீர்மானம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.
ஜெய் ஷாவின் தலைமை மீது நம்பிக்கை
கிரிக்கெட் விளையாட்டை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்துதல், இரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் வணிக மேம்பாடுகளில் கவனம் செலுத்தும் இக்காலகட்டத்தில், ஜெய் ஷாவின் தலைமை மீது பணிப்பாளர் குழாம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையே இப்புதிய நியமனம் பிரதிபலிப்பதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு ஐ.சி.சி பணிப்பாளர் குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ள ஜெய் ஷா,
"ஐ.சி.சி பணிப்பாளர் குழாம் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்தும் ஆதரவளித்து வரும் ஒவ்வொரு பணிப்பாளர் சபை உறுப்பினருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
எதிர்கால முன்னுரிமைகளும் இலக்குகளும்
-
ஒலிம்பிக் போட்டிகள் (2028): 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீளவும் இணைக்கப்பட்டுள்ளமையானது, புதிய இரசிகர்களை ஈர்ப்பதற்கும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பதற்கும் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
-
முன்னுரிமைப் பணிகள்: கிரிக்கெட் விளையாட்டின் நீண்டகால நிலைபேற்றுத்தன்மையை வலுப்படுத்துதல், வீரர்களுக்கும் இரசிகர்களுக்கும் தேவையான ஆதரவை வழங்குதல் மற்றும் விளையாட்டின் உலகளாவிய எல்லையை விரிவுபடுத்துதல் என்பன தனது பிரதான முன்னுரிமைகளாக இருக்கும் என ஜெய் ஷா உறுதியளித்தார்.
அமைப்பின் அபிலாஷைகளை அர்த்தபூர்வமான முன்னேற்றமாக மாற்றுவதற்கும், கிரிக்கெட் விளையாட்டுக்காக அழியாத ஒரு வரலாற்றை உருவாக்குவதற்கும் ஐ.சி.சி உறுப்பினர்களுடன் இணைந்து தொடர்ந்தும் நெருக்கமாகப் பணியாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


