இந்தியாவில் இன்று (08) நடைபெற்ற “ரைசிங் பாரத்“ உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள நாமல், “இன்று #RisingBharatSummit2025 நிகழ்வின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது உறுதியான தலைமையின் கீழ் இந்தியா நவீன உலகில் உயர்ந்த உயரங்களை எட்டியுள்ளது, அதன் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, “ரைசிங் பாரத்” உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய நாமல், “தெற்காசிய நாடுகள் அரசியல் பிளவுகளுக்கு அப்பால் நகர்ந்து, பகிரப்பட்ட வளர்ச்சி சவால்களைச் சமாளிக்க பிராந்திய ஒத்துழைப்பைத் தொடர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் வளர்ச்சித் திட்டங்களில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட தாமதங்கள் எரிசக்தி நெருக்கடிக்கு வழிவகுத்தன என்றும்” அவர் கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் கூறியதாவது,
"கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசியல் காரணங்களின் அடிப்படையில் சில வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் முற்றிலும் புறக்கணித்ததுள்ளோம். உதாரணமாக, சம்பூர் திட்டம் 2015இல் தொடங்கப்படவிருந்தது, அதேபோல் ஈரானிய நிதியிலிருந்து உமா ஓயா திட்டம் போன்றவை தாமதப்படுத்தப்பட்டன.
“இதன் விளைவாக, 2022இல் நாங்கள் ஒரு எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டோம். அது பின்னர் நிதி நெருக்கடியாக மாறியது. பிராந்திய கூட்டாண்மையை நாம் குறுகிய காலாத்திற்குள் அமைக்க வேண்டும். குறிப்பாக இந்தியப் பெருங்கடல் நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. மேலும் இந்தியப் பெருங்கடல் நாடுகள் ஒன்றிணைந்து வர்த்தகத்தில் புதிய கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டும்.
“அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பானது இலங்கையின் ஆடைகள் அல்லது ஏற்றுமதிகளை நேரடியாகப் பாதிக்கும். ஆனால் இலங்கையின் கடல்சார் துறையையும் பாதிக்கும். நாங்கள் அதே நேரத்தில் வர்த்தகம் மற்றும் தளவாடங்களையும் பெரிதும் நம்பியுள்ளோம்.
“இந்தியா போன்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், பிராந்தியத்திற்குள் புதிய கூட்டணிகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் புதிய கூட்டாண்மைகளை உருவாக்குவது என்பதைப் பார்க்க இது அவசியம்.
“ஒரு முக்கிய அரசியல் குடும்பத்துடன் இணைக்கப்பட்டு சீர்திருத்தத்தை ஆதரிப்பதில் உள்ள சவால்கள் காணப்படும். ஆனால் அது நாம் அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது உலகளாவிய சூழலைப் புரிந்துகொள்வது பற்றிய சிந்தனையை எமக்கு தரும்” என்று, நாமல் மேலும் கூறியுள்ளார்.