யாழ்.மாவட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யவில்லை என

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க, சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக அருளானந்தம் அருண் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

குறித்த நியமனம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஐ.தே.கவின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, புதிய அமைப்பாளர்  நியமனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த மறுசீரமைப்புகள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை” என்றார்.

இதேவேளை, தனது யாழ்ப்பாண விஜயத்தில் அங்கஜன் இராமநாதன் கூட இருப்பார் என்றும் உத்தியோகபூர்வ நியமனங்கள் வழங்குவதற்கு முன்னர் எதிர்ப்புகள் காணப்படுமாயின், அவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டுவரும் நிலையில், புதிய அமைப்பாளர் நியமனம் தொடர்பில் ரவி கருணாநாயக்க வெளியிட்ட அறிவிப்பு, ஐ.தே.கவின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி