"தந்தை செல்வாவின் அரசியல் அணுகுமுறையும் அவரின் சொந்தக் குணாதிசயமும் ஒன்றாகவே இருந்தது. அவர் ஒத்து ஓடுகின்றவர்

அல்லர். அதாவது அடம்பன்கொடி திரண்டு இருக்க வேண்டும் என்பதற்காகச் சேரக் கூடாதவர்களோடு சேருபவர் அல்லர்." என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தந்தை செல்வநாயகம் சென் தோமஸ் கல்லூரியில் கற்பிக்கும் வேளையிலே சகோதரனின் உடல்நிலை கருதி விடுமுறை கோரியபோது அதிபர் மறுத்தமையால் அன்றைய தினமே இராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினார். அதன் பின்பு வெஸ்ரி கல்லூரியில் அவர் பணியாற்றும்போது ஆங்கிலேயர் ஆட்சியில் வேட்டி சால்வை அணிந்து பணியாற்ற முடியாது என்ற போது அங்கும் வேலையை இராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார்.

அனைவரும் இணைந்து செல்வோமே என நினைத்தவர் அல்லர் தந்தை செல்வா. அவரது அரசியல் அணுகுமுறையும் அவரது தனிப்பட்ட குணாதிசயத்துடன் ஒத்ததாகவே இருந்தது. இல்லையென்றால், 1947 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தால் அழைத்து வரப்பட்டு காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றியீட்டினார். எனினும், நாடாளுமன்றம் வந்து ஓரிரு ஆண்டுகளிலேயே பொன்னம்பலம் தலைமையில் பொன்னம்பலம் அணி எனவும், உப தலைவர் செல்வநாயகம் தலைமையில் செல்வா அணி எனவும் இரண்டாகப் பிரிந்தது.

பிரிய வேண்டும் என்பதற்காகத் தந்தை செல்வா பிரியவில்லை, பிரஜாவுரிமைச் சட்டத்தை அன்றைய இலங்கைத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க அறிமுகப்படுத்தியபோது அது தீங்கானது, அதனை ஆதரிக்க முடியாது, 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இலங்கை - இந்தியக் காங்கிரஸ் அந்த உறுப்பினர்களின் பிரஜாவுரிமையே அற்றுப்போகும் விதமாக அந்தச் சட்டம் இயற்றப்பட்டு கொண்டு வந்தபோது அதனை எதிர்க்க வேண்டும் எனக் கட்சிக்குள்ளேயே வாதாடினார். கட்சி அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கொள்கையின் நிமித்தம் கட்சியை இரண்டாகப் பிளந்தார். 101பேர் இருந்த நாடாளுமன்றத்தில் 6 பேர் கொண்ட கட்சியில் இருந்து 3 பேர் அதற்கு எதிராக வாக்களித்தனர். கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஒற்றுமை என்ற கோஷத்துக்காகத் தவறைச் செய்ய அவர் விரும்பவில்லை. ஒற்றுமை அல்ல, கொள்கையே முக்கியம், எங்களுடைய நிலைப்பாடு முக்கியம், எதற்காக மக்களுக்காக எழுந்து நிற்கின்றோம் என்பது முக்கியம், அதைச் செய்யத் துணிந்தார்.

1949 ஆம் ஆண்டு புதிதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை அவர் ஆரம்பித்தார். வருட ஆரம்பத்தில் மாவிட்டபுரத்தில் அண்ணன் மாவை.சேனாதிராஜாவின் வீட்டுக்கு அருகிலே கட்சியின் அங்குரார்ப்பணம் நடந்தது. எனினும், டிசம்பரில் கொழும்பில்தான் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை உத்தியோகபூர்வமாக அவர் நடத்தினார். அதற்கு முன்னர் பல முஸ்தீபுகள் இடம்பெற்றபோது அதைக் கற்கலால் எறிந்து குழப்பினார்கள், அடித்துத் துரத்தினார்கள். இவையெல்லாம் யாழ்ப்பாணத்திலேயே இடம்பெற்றன. அதனால்தான் 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி கொழும்பு - மருதானையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை அங்குரார்ப்பணம் செய்தார்.

பிடித்த கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார். அந்த வழியைத் தன்னுடைய மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். 3 ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தலிலே போட்டியிட்டு தோல்வி கண்டார். தமிழரசுக் கட்சி சார்பில் கோப்பாயில் வன்னியசிங்கமும், திருகோணமலையில் இராஜவரோதயமும் மட்டுமே வெற்றியீட்டினர். முதல் தேர்தலிலேயே தமிழரசுக் கட்சியை வெற்றிகொள்ள வைத்த பெருமிதம் திருமலைக்கு உண்டு. ஆனாலும், கட்சி தோல்வியடைந்தது.

மக்கள் தனது கொள்கையைப் புறக்கணித்து விட்டார்கள் என அவர் விட்டுவிடவில்லை. அந்தத் தேர்தலிலே காங்கேசன்துறைத் தொகுதியில் தான் தோற்றபோது அவர் நீதிமன்றிலே வழக்கு ஒன்றைத் தொடுத்தார். தேர்தல் வெற்றி தவறானது, முடிவு தவறானது எனத் தானே வாதாடி வழக்கொன்றைத் தொடுத்தார். அந்த வழக்கிலேயும் அவர் தோற்றார். தோற்றது மட்டுமன்றி அன்று வழக்குச் செலவாக 40 ஆயிரம் ரூபாவையும் அவர் கட்ட வேண்டியும் இருந்தது. அதையும் செய்தார். ஆனால், 1956 ஆம் ஆண்டில் இருந்து இளையவர்களையும், புதியவர்களையும் கட்சிக்குள் சேர்த்தார். வேட்பாளர்களாக நிறுத்தியவர்கள் எல்லாம் 30 வயதுக்கும் குறைந்தவர்கள். பெரு வெற்றி கண்டார். அதற்குப் பிறகு இன்று வரைக்கும் அவர் வகுத்த சமஷ்டிக் கொள்கைக்குத் தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ச்சியாக வாக்களித்து வருகின்றார்கள்.

ஆகவே, அவரது அரசியல் அணுகுமுறையை அறிந்திருப்பது அல்லது பின்பற்றுவது அத்தியாவசியம். இந்த விடயத்திலே தந்தை செல்வா சொன்ன இரண்டு விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன். இதே மண்ணிலே தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாடு 1951ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது தந்தை செல்வாவின் பேருரையில் சொன்ன ஒரு வாசகம், "ஓர் இனம் அழியாமல் இருப்பதற்குப் பல ஏற்றம் தேவை. ஒன்று அந்த இனத்தின் எண்ணுத்தொகை குறையாமல் இருப்பது. இரண்டாவது அந்த இனம் வசிக்கும் பிரதேசம் பறிபோகாமல் இருப்பது." இந்த இரண்டும் இந்தத் தீவிலே எங்கள் இனம் அழியாமல் இருக்க வேண்டுமானால் நாம் எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும், நாம் வதியும் பிரதேசம் பறிபோகாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்வதாக இருந்தால் நாம் வசிக்கும் பிரதேசத்தில் ஆட்சி முறை மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர் தனது சமஷ்டி கொள்கையை முன்வைத்தார்.

1956ஆம் ஆண்டிலேயே தனிநாட்டுக் கோரிக்கை எழுந்தது. அடங்காத் தமிழன் சி.சுந்தரலிங்கம் ஈழம் என்று பெயர் கொடுத்தார். ஆனால், தந்தை செல்வா அதை அந்த வேளை ஏற்கவில்லை. தொடர்ச்சியாக பலர் தனியாகப் பிரிந்துபோவதுதான் ஒரே வழியெனக் கூறியபோதும் அவர் அதனை ஏற்கவில்லை. 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூடியபோது வவுனியாவைச் சேர்ந்த சிற்றம்பலம் தனிநாடுதான் ஒரே வழி என்ற தீர்மானத்தை முன்வைத்தார். அப்போது தந்தை செல்வா சொன்னது "இது வன்முறையில் முடியும். ஆயுதப் போர் பிரச்சினையைத் தீர்க்காது" என்று கூறி அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற விடவில்லை.

11ஆவது மாநாடு உடுவிலே நடந்தபோது இளைஞர் அணி - அதாவது வாலிபர் முன்னணியினர் வந்து தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் எனச் சொன்னபோது அவர்களுக்கு அறிவுரை கூறி அதனை நீங்கள் முன்மொழிய வேண்டாம், இதனை நான் எதிர்த்தவன் அல்லன்,  இது எமது மக்களுக்குப் பாதகமாக முடியும் எனக் கூறி அதனையும் தந்தை செல்வா தடுத்தார்.

1970ஆம் ஆண்டுத் தேர்தலிலே வி.நவரட்ணம் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கி தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தேர்தலிலே போட்டியிட்டபோது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைப்பவர்களிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் சொல்லியிருக்கின்றோம்.

அதே தந்தை செல்வா 1972 ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு தொகுக்கப்பட்டபோது மாற்று யாப்பை முன்வைத்தார். சமஷ்டி அடப்படையிலே அந்த யாப்பு இருந்தது. எமது வெள்ளி விழா மலரிலும் அது இருக்கின்றது. அந்த யாப்பிலே பல விடயங்களை அவர் கோரியிருந்தாலும் இறுதியிலே எமது கட்சியின் சார்பில் வி.தர்மலிங்கம் 5 பிரேரணைகளை (நாடாளுமன்றத்தில்) முன்வைத்தார். அனைத்தும் பெரும்பான்மை வாக்குகளால்  தோற்கடிக்கப்பட்டபோது தந்தை சொன்னார்,  ''இனி, நாளையில் இருந்து நாம் இங்கே வர மாட்டோம். நாம் வெளிநடப்புச் செய்து இதனை ஒரு நாடகமாக மாற்ற விரும்பவில்லை. ஆனால், நாளையில் இருந்து நாம் இங்கு வரமாட்டோம்'' - என்று சொன்னார்.

அதனைத் தொடர்ந்து இராஜிநாமா செய்தார். இடைத்தேர்தலும் இரண்டரை ஆண்டுகள் இடம்பெறாமல் இருந்தது. 1975ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடைத்தேர்தலிலே அவர் பெருவெற்றியீட்டினார். அதன் பிறகுதான் தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்டது. 

1976ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி வட்டுக்கோட்டை தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், எமது கட்சி தனிநாடு ஒன்றை நிறுவ முனைகின்றது. இது இலேசான காரியம் அன்று, வில்லங்கமானது என்பதை நாம் அறிவோம்" -  என்று அதனை விவரித்துச் சொல்லி விட்டு, எமது நடவடிக்கை சாத்வீகமானது எனச் சொன்னார்" என்றார்.

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி