2024, நம் நாட்டிற்கு மிக முக்கியமான ஆண்டாகும். ஏனென்றால் அது ஒரு முக்கியமான தேசியத் தேர்தல் அல்லது இரண்டு தேர்தல்கள்

நடத்தப்பட வேண்டிய வருடமாகக் காணப்படுகிறது. எனினும், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா, அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி, சமீப நாட்களாக வலுவாக எழுந்துள்ளது.

இந்த சர்ச்சை, பெசில் ராஜபக்ஷ, மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தொடங்கியதால் ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு, ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு, பெசில் ராஜபக்ஷவினால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஊடகமொன்றுக்கு வந்து, அவர் அந்த நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.

“இந்த ஜனாதிபதித் தேர்தல், ராஜபக்சஷர்களுக்கு சாதகமற்ற தேர்தலாகும். இப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரியான நபரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த தம்மிக்க பெரேராவும் முடியாதென்று சொல்லிவிட்டார்.  அதனால்தான் பொதுத் தேர்தலை நடத்துவோம் என்று கூச்சல் போடுகிறார்கள்.

பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 20 முதல் 25 ஆசனங்களையாவது பெறவேண்டும் என்பதே அந்த முயற்சி” என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். “ஜூலை நடுப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. அதாவது, மற்ற தேர்தல்களைப்போல அல்லாமல், அது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நடத்தப்பட வேண்டும்.

அது நெகிழ்வுத்தன்மையற்றது. பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு, ஜனாதிபதித் தேர்தலை ஒருபோதும் ஒத்திவைக்க முடியாது. இது குறிப்பிட்ட திகதிகளில் நடத்தப்பட வேண்டும்” என்று, ஐமசவில் இணைந்துகொண்ட பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அந்தக் கதைகள் எவற்றையும் செவிமடுக்காத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்விடயம் தொடர்பான தனது நிலைப்பாட்டை, அமைச்சரவையில் தெளிவாகக் கூறியுள்ளார். முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா, ஜனாதிபதித் தேர்தலா என்று பரப்பப்படும் சர்ச்சைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படுமென்று, அமைச்சரவையில் ஜனாதிபதி, உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார். அதனால், ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும் அறிவித்திருக்கிறார். அது மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவிற்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 5-ம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஒரு வாரம் முன்னதாகவே நடத்துவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 28-ம் திகதி சனிக்கிழமையன்று ஜனாதிபதித் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது.

அதனால், புதிய கூட்டணியின் வேலைகளை விரைவுபடுத்துமாறு, வஜிரவுக்கும் ரவிக்கும் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புப் பொறுப்பு ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரவியை உடனடியாக யாழ்ப்பாணம் சென்று வேலையை ஆரம்பிக்கச் சொல்லியும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நாளையே, ரவி வடக்குக்கு செல்லவுள்ளார். அதுமட்டுமின்றி, ருவன், சாகல, அக்கில, ஹரின், மனுஷ ஆகியோருக்கும் தனிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும், ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அப்படிச் சொன்னாலும், பெசிலும் நாமலும் பின்வாங்கியதாகத் தெரியவில்லை. சித்திரைப் புத்தாண்டு முடிந்தவுடன், பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று, மீண்டும் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இல்லையெனில் கடும் முடிவு எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும், இந்த விளையாட்டில் இணைந்துள்ளதாக வதந்தி பரவியுள்ளது. அந்தவகையில், ஜனாதிபதி ரணிலின் நெருங்கிய நண்பர்களை அழைத்து, மூளைச்சலவை செய்யவும் ஆரம்பித்துள்ளனராம். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் நெருங்கிய உறவினர் ஒருவரை அழைத்தும், மூளைச் சலவை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

“நாங்கள் ஆதரவளித்தாலும்கூட, ரணில் வெற்றி பெறுவது கடினம். ஜே.வி.பி, தற்போது முன்னிலையில் இருக்கிறது. அதனால், சஜித்துடன் இணைவதே சிறந்தது. இரண்டு மூன்று பேரை பிரித்தெடுப்பதால் எதுவும் நடக்காது. இல்லையேல் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தச் சொல்லுங்கள். அப்படி நடந்தால், எப்படியாவது நாம் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறலாம். இல்லையேல் அழிந்து, நாமும் அழியத்தான் நேரிடும்” என்று மஹிந்த கூறியதாகத் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி விக்கிரமசிங்க தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது, ராஜபக்ஷர்கள் ஆதரிக்காவிடின், வேறு விதத்தில் Game ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளார்கள். ஏனெனில், தற்போது மொட்டுக் கட்சி தரப்பிலுள்ள ஓரிருவரைத் தவிர, ஏனைய அனைத்து உறுப்பினர்களும், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுகின்றனர்.

அவ்வாறே, எதிர்கால அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறான பின்னணியில், ராஜபக்ஷர்க்கள் தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி, சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறார்களா, இல்லையா என்பது தொடர்பில், ராஜபக்ஷர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி