உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்தான் சர்வாதிகாரி - கொடுங்கோல்

ஆட்சியாளன் என்றெல்லாம் விளிக்கப்படுகின்ற ஹிட்லர்.

எனினும், வரலாற்றில் இருண்ட பக்கங்களிலேயே அவருக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் கொள்கைப்பரப்பாளராக - வலது கரமாக செயற்பட்டவர்தான் ஜோசப் கோயபெல்ஸ்.

எந்தப் பொய்யையும் மக்கள் மத்தியில் நயமாகச் சொல்லி, அவர்களின் மனங்களை மாற்றி நம்பவைக்கும் வித்தை அறிந்தவர். அதாவது, ஒரு கருத்தியலை, மெல்லமெல்ல மக்களிடம் திணித்து - அதை பொதுக் கருத்தாக்கி - அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைக்கும் பெரும் தந்திரக்காரர் என்றே ஜோசப் கோயபெல்ஸ் தொடர்பில் எழுதியுள்ளவர்கள் பதிவிட்டுள்ளனர்.

இலங்கை அரசியலிலும் ஜோசப் கோயபெல்ஸ்சுகளுக்கு அன்று முதல் இன்றுவரை பஞ்சமில்லை எனலாம். அவர்கள் அவ்வப்போது களத்துக்கு வந்து - கம்பு சுத்தி - வம்பிழுப்பது வழமை. ராஜபக்ச ஆட்சியின்போது கோயபெல்ஸ்களின் செல்வாக்கு கோலோச்சி இருந்தது. ரணில், மைத்திரி ஆட்சியிலும் அப்படியானவர்கள் இருக்கவே செய்தனர்.

எனினும், நாட்டை ஆளும் தேசிய மக்கள் சக்தியினரையும் கோயபெல்ஸ்களாக காண்பிப்பதற்கு ராஜபக்ச தரப்பு தற்போது முற்படுகின்றது. 'மகா பொய்யர்கள்" என்ற முத்திரையும் குத்தப்பட்டுள்ளது. ராஜபக்ச அணியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட தரப்பினரும் ஆளுங்கட்சியினரை பொய்யர்களாக காண்பிப்பதற்கு முற்பட்டுவருகின்றனர்.

ராஜபக்சக்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பணம் எங்கே? நாமலின் தங்கக் குதிரைகள் எங்கே என்றெல்லாம் அரசியல் களத்தில் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டுவருகின்றன. அதுமட்டுமல்ல ராஜபக்சக்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான தர்ம யுத்தம்கூட மொட்டு கட்சியினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை இடம்பெற்று, கைதுகள் இடம்பெற்றால் அதை அரசியல் பழிவாங்கல் எனவும், அரசாங்க தலையீடு உள்ளது எனவும் எதிரணிகள் கொக்கரிக்கின்றன.

விசாரணைகளில் அரசாங்கம் தலையிடவதில்லை. அவ்வாறு தலையிடவும் கூடாது. விசாரணைகளை முன்னெடுக்கும் தரப்புகளுக்குரிய வளங்களை வழங்கலாம். தொழில்நுட்ப உதவிகளை செய்து கொடுக்கலாம். கடந்த காலங்களில் காவல்துறை விசாரணைகளில் அரசியலை புகுந்தியவர்களுக்கு, தற்போது அவ்வாறு நடப்பதில்லை என்பது விளங்கினால் - இப்படியான வியாக்கியானங்கள் பேசவேண்டிய தேவை வராது.

என்.பி.பி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே கடந்துள்ள நிலையில், பெறுபேறுகள் - பிரதிபலன்கள் தொடர்பில் ஆட்சியாளர்கள்மீது அடுக்கடுக்காக - ஆயிரக்கணக்கான விமர்சனக்கணைகளைத் தொடுப்பது எந்த வகையில் நியாயம் என்பதே என்பிபி ஆதரவாளர்களின் ஆதங்கமாகும்.

தேசிய மக்கள் சக்தியினரை கோயபெல்ஸ்கள் என விமர்சிக்கும் எதிரணியே தற்போது அக்கட்சிக்கு எதிராக கோயபெல்ஸ் யுக்தியை கையாண்டு வருகின்றது.

266 உள்ளுராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகுக்கும் நிலையில், எதிரணிகள் எல்லாம் ஒன்றிணைந்து மக்கள் ஆணை தமக்கே உள்ளது என்ற கருத்தை விதைத்துவருகின்றன.

ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல்களின்போது - ஐதேகவுடன் இணைவது தொடர்பில் கொள்கை, கோட்பாடுகள் பற்றி வீரவசனம் பேசிய சஜித், தற்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு குட்டி சபைகளில் கூட்டு சேருவார்? இது அரசியலில் எந்த டிசைனைச் சாரும்?

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியினரின் நடத்தை பற்றி விமர்சிக்க முடியாது. ஊழல், மோசடிகள் இடம்பெறவில்லை. அதிகார துஷ்பிரயோகம் நடப்பதில்லை. அரச வளங்கள் வீண்விரயம் செய்யப்படுவதில்லை.

எனவேதான் தேசிய மக்கள் சக்திக்கும், ஜே.வி.பிக்கும் இடையில் மோதல் என்ற பொய், சமூகமயப்படுத்தப்பட்டு - அது உண்மையென நம்ப வைப்பதற்குரிய கோயபெல்ஸ் யுக்தி கையாளப்படுகின்றது.

-ஆர்.சனத்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி