தேசிய பிரச்சினைக்குத் தீர்வைத் தேடிக் கொள்ள முடியுமாக இருந்தால் தமது கட்சிகளைக் கலைத்துவிட்டு பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைவதற்கு
தமிழ் அரசியல்வாதிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இரத்மலானை சில்வாஸ் மண்டபத்தில் இடம்பெற்ற கல்வியியலாளர்களுடனான சந்திப்பின் போது தேசிய பிரச்சினை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது,“அரசியலமைப்பு தொடர்பில் அனேக யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் நாம் அனேக பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றோம். கூட்டணி இதனை எதிர்த்ததால் அன்று இதனைச் செய்ய முடியாது போனது.
ஜனாதிபதி தேர்தலில் பின்னர் பாராளுமன்றத்தில் 125 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இரந்தால் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள முடியும். அப்போது குறித்த திருத்தங்களைச் செய்து கொள்ள முடியும்.
தமிழ் கட்சிகள் ஏற்றுக் கொள்வது ஒற்றையாட்சியினுள் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக் கொண்டு அதிகாரத்தைப் பகிர்வதேயாகும். தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தாருங்கள், அப்போது தமது கட்சிகள் தேவையில்லை என்றும், அக்கட்சிகளைக் கலைத்துவிட்டு பிரதான கட்சிகளோடு இணைந்து கொள்வதாகவும் அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர்” என்றார்.