கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து

ஐம்பதாயிரம் ரூபா பணம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தப் பணம் தமக்குச் சொந்தமானது என ஒப்புக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, அந்தப் பணத்தை தமக்கே திருப்பித் தருமாறு சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்த போதும், கோட்டை நீதவான் திலின கமகே அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

குறித்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், முன்னாள் ஜனாதிபதி பணத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டார் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இலஞ்சம் அல்லது பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றம் செய்தாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளிடம் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசிங்கவை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனிடம் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய இந்த பணம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 11.11.2022 அன்று தொலைபேசி மூலம் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக மார்ச் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசிங்கவை அச்சுறுத்தும் வகையில் தொலைபேசியில் அழைப்பு விடுத்தமை தொடர்பிலான அறிக்கைகளை தொலைபேசி நிறுவனம் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.

ஜூலை 9ஆம் திகதி கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் பிரவேசித்த போது முன்னாள் ஜனாதிபதியின் காரியாலயத்தில் காணப்பட்ட பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸ் விசேட குற்றத்தடுப்புப் பிரிவிற்கு கடந்த 13ஆம் திகதி உத்தரவிட்டார்.

கொம்பனித்தெரு பொலிஸாரின் பிடியில் இருந்த இந்தப் பணத்தை, கோட்டை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு ஜூலை 28ஆம் திகதி உத்தரவிடப்பட்டதுடன், கொழும்பு மத்தியப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் இந்தச் சேகரிப்பை மேற்கொண்டார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி மீண்டும் அழைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி