நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என வலியுறுத்திய

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், கடன் சுமையற்ற மற்றும் கடனை மீளச் செலுத்தக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன் என்றும் தெரிவித்தார்.

இலங்கை-ஜப்பான் உறவுகளின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் கடவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விநியோக நிலையத்தை இன்று (14) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னரான பொருளாதார வேலைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாமையால் இன்று நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடத்திற்குள் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடியதும் நாட்டுக்கு முதலீட்டு வாய்ப்புகளை கொண்டு வரக்கூடியதுமான நிறுவனக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இலங்கை முதலீட்டு சபையின் முதலீட்டு ஊக்குவிப்புப் பிரிவை, ஏற்றுமதி மேம்பாட்டு சபையுடன் இணைத்து பொருளாதார கூட்டுத்தாபனமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"இன்று வியட்நாமின் பொருளாதாரம் போர்மியுலா வன் பந்தயக் கார் போல் உள்ளது. நமது பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டி போல் உள்ளது. அப்படி இருப்பின் நாம் எப்படி சிங்கப்பூர் ஓட்டப் பந்தயத்திற்கு செல்வது? மற்ற நாடுகளுக்கு போர்மியுலா வன் பந்தயக் கார்கள் உள்ளன.

“நாங்கள் முச்சக்கர வண்டியில் சென்று போட்டியிடலாமா? மக்கள் தினமும் பயணம் செய்வதற்கே இது நல்லது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இது நன்றாக இருக்கிறது என்று மீண்டும் சொல்கிறேன். ஆனால் பந்தயத்திற்கு அது சரியாகப் போவதில்லை.

“நாம் எப்படி வெல்வது? அவ்வாறென்றால் நாம் ஒரு பந்தய காரைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு நல்ல இயந்திரம் இருக்க வேண்டும். அதாவது நல்ல பொருளாதாரம். அதுதான் இப்போது நாம் கட்டியெழுப்பும் பொருளாதாரம்.

“இந்த நாட்டில் திறந்த பொருளாதாரத்தை உருவாக்கி அந்த இயந்திரத்தை உருவாக்குகிறோம். போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கி உலகத்துடன் போட்டியிடும் வகையில் இந்தப் பந்தய கார் தயாரிக்கப்படுகின்றது. அதை வெல்லும் திறமை உங்கள் அனைவருக்கும் இருப்பதாக நான் நம்புகிறேன்.

“முதலில் நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரம், சூழல் நேயப் பொருளாதாரம், அத்துடன் சமூக நீதியான பொருளாதாரம் மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதி பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.

“பழைய முறைகளில் பழகியவர்கள் இதை எதிர்க்கலாம். ஆனால் நாம் புதிய பாதையில் செல்ல வேண்டும். நீங்கள் பந்தயக் காரில் செல்ல விரும்புகிறீர்களா? மிதிவண்டியில் செல்ல விரும்புகிறீர்களா? என்று என்னிடம் சொல்லுங்கள். ஏனென்றால் எதிர்காலம் உங்கள் அனைவருக்கும் சொந்தமானது” என்றார்.

பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து டொயோட்டா மோட்டார் உதிரிப் பாகங்கள் விநியோக நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.

இலங்கை - ஜப்பான் உறவுகளின் 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடியதுடன் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. டொயோட்டா லங்கா நிறுவனத்தின் ஊழியர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, டொயோட்டா லங்கா நிறுவனத்தின் தலைவர் சவியோ  யோட்சுகுரா மற்றும் டொயோட்டா லங்கா நிறுவனத்தின ஊழியர்கள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி