சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டும் இலங்கை இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினையைத் தீர்க்காது என்று கடல்சார் மற்றும்
ராஜதந்திர நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர் என்று, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்பதையும் கடல்சார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, கச்சத்தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, இலங்கையுடன் நீண்டகால குத்தகை அல்லது மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நிபுணர்கள் யோசனையை முன்வைத்துள்ளனர்.
இது குறித்து இந்தியா ஆழமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.