தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுவது தொடர்பில்

தொழில்நுட்ப ரீதியில் ஆராயப்பட்டு வருவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், வவுனியா – குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போதே, கூட்டமைப்பின் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பான ஆராயப்பட்டன. தற்போது ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படும் அரசமைப்பு விடயங்கள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளூராட்சிசபை வட்டார எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டமை தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்கெனவே தமிழ்த் தேசிய கட்சிகளோடு பேசி மூன்று விடயங்களை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம் என்றும் இதன்போது சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

“முதலாவதாக அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வெண்டும். காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

“இரண்டாவதாக, தற்போது அரசமைப்பிலும் சட்டங்களிலும் உள்ள அதிகாரப் பகிர்வு விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

“மூன்றாவதாக, வடக்கு – கிழக்கில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறையில் – சமஷ்டி கட்டமைப்பில் – உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

“இந்த மூன்று விடயங்களையும் சமாந்தரமாக முன்கொண்டு செல்ல வேண்டும் என்று அரசாங்கத்திடம் வேலியுறுத்தியுள்ளோம். சில கால எல்லைக்குள் இந்த மூன்று விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளோம்.

“அவற்றை ஏனைய கட்சிகளுடனும் பகிர்ந்து, ஒற்றுமையான நிலைப்பாட்டை இந்தப் பேச்சின் போது எடுக்கத் தீர்மானித்துள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வு சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சிகளை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். உள்ளராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் சம்பந்தமாகத் தற்போது இடம்பெறும் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம்.

“இந்த எல்லை மீள் நிர்ணயம் சில இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. அவற்றை உடனடியாக ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்துவதாகவும் அத்தோடு, 60க்கும் 40க்கும் என்ற சதவீதத்தில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதாக உள்ள சட்டம், 70க்கு 30ஆக மாற்றப்பட வேண்டும் என்பதை நாடாளுமன்றத்திலும் அரசாங்கத்திடமும் தெரியப்படுத்துவதாகவும் தீர்மானித்துள்ளோம்.

“தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுவது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் ஆராயப்பட்டு வருகிறோம். வட்டார ரீதியாக ஒரு வீதமும் அதற்கு மேலதிகமாக விகிதாசார முறையில் இன்னொரு வீதமும் சேர்த்துக்கொள்ளப்படுவது தொடர்பில், சென்ற முறை எமக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் பார்த்து, தனித்தனியாகப் போட்டியிட்டால், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குக் கூடுதலான உறுப்பினர்கள் கிடைக்குமா, இல்லையா? என்ற தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்.

“ஜனாதிபதியுடனும் நீதி அமைச்சருடனும் நான் பேசிய போது, அரசியல் கைதிகள் 32 பேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். அதில், ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலை செய்யப்படக்கூடியவர்கள் எவரும் இல்லை என்ற கருத்தும் கூறப்பட்டது. இருப்பினும், ஜனாதிபதி அதனை மீள்பரிசீலனை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் ரீதியில் அவர்கள் குறித்த கொள்கையில் செயற்படுகிறார்கள். அதாவது, தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் குண்டு வைத்தவர்கள், அரசியல் படுகொலைகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களை விடுவிப்பதில்லை என்ற முடிவு அவர்களிடம் காணப்பட்டது. எனினும், அவர்கள் நீண்டகாலம் சிறையில் இருந்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அதனை மறுபரிசீலனை செய்வதெனத் தெரிவித்துள்ளனர்.

“திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பலஷவிதச் சிக்கல்களைக் கையாள்வதற்கு ஒரு பொறிமுறை அவசியம் என்ற அடிப்படையில் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. நானும் மாவை சேனாதிராஜாவும் சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினோம். அவர் அதனை வெவ்வேறு விதத்தில் கையாள்வதாகக் கூறியிருக்கின்றார். எனவே, அந்த விடயங்கள் கையாளப்படும் என நம்புகிறோம்” என்று, சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

(காலைக்கதிர்)


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி