ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்

எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று மாலை சுமார் 45 நிமிட நேரம் சந்தித்து நேரடிக் கலந்தாலோசனைகளை நடத்தியுள்ளர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 13ஆம் திகதியன்று, ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தையொட்டி, தேசிய பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்கும் வழிவகைகள் குறித்து, இந்த மூவரும் மந்திராலோசனை நடத்தியுள்ளனர் என்று தெரியவருகிறது.

இந்த விவகாரத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி முன்னநகர்த்துவது என்பவை குறித்து, பேச்சுக்கான பேச்சு பற்றி மூவரும் ஆலோசித்தனர் எனத் தெரியவருகிறது.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உத்தேசப் பேச்சுக்களை ஒட்டிய தமிழர் தரப்பின் ஒன்றுபட்ட கருத்து நிலைப்பாட்டை நேற்றை சந்திப்பில் சுமந்திரரன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எடுத்துரைத்தார் என்றும் தெரியவருகிறது.

அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு ஏழாவது உறுப்பினரை நியமிப்பது தொடர்பில் பேரினவாதத் தரப்புக்கள் நேற்றைய தினம் பகல் எப்படி நடந்துகொண்டன என்பதை, ஜனாதிபதிக்கு சுமந்திரன் எம்.பி எடுத்துரைத்தார்.

13ஆம் திகதியக்று பேச்சுக்கள் ஆரம்பமாகும் போது, சமாதான முயற்சிகளுக்கு எதிரான தீவிர பேரினவாதக் கருத்துக்கள் இத்தகைய சக்திகளால் நிச்சயம் முன்வைக்கப்படும். அவற்றைப் புறமொதுக்கிவிட்டு முன்நகரும் அரசியல் துணிவும் திடசங்கற்பமும் இருந்தால் மட்டுமே இந்த விடயத்தை முன்னெடுக்க முடியும் என்று, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சுமந்திரன் எம்.பி எடுத்துரைத்தார்.

ஒருபுறம் பேச்சு நடக்கும் அதேசமயம், மறுபுறத்தில் மாகாணசபைத் தேர்தலைக் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்தி, அரசமைப்பு ஏற்பாடுகளில் ஏற்கெனவே உள்ளவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுத்தால்தான் இந்த சமரச முயற்சியில் நம்பிக்கை பிறக்கும் என சுமந்திரன் எம்.பி எடுத்துரைத்த போது, அதை ஆமோதிக்கும் வகையில் ஜனாதிபதி செவிமடுத்துள்ளார் என்று தெரியவருகிறது.

ஜனாதிபதி செயலகத்திலோ பிரதமர் அலுவலகத்திலோ இந்தச் சந்திப்பு நடக்கவில்லை. மூன்றாம் தரப்புக்குத் தெரியாமல், கொழும்பில் பொதுவான இடமொன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி