தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடலில்,

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சமஷ்டி முறைமையை முன்வைக்க தமிழ் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

“சிங்கள அரசியல்வாதிகள், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டுக்காக சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதிலேயே முதன்மையாக அக்கறை கொண்டுள்ளனர். இது தொடரும் வரை எதுவும் செய்ய முடியாது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை (ICESCR) ஆகியவற்றில் இலங்கை அங்கம் வகிக்கின்றது. இந்த இரண்டு ஒப்பந்தங்களும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்குகின்றன” என்று, ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெளியாகும் ``Front Line'' இதழுக்கு பேட்டியளித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர், “நாட்டை எந்த வகையிலும் பிளவுபடுத்த விரும்பவில்லை. நாங்கள் பிரிக்கப்படாத இலங்கைக்காக நிற்கிறோம். அதே சமயம் இப்படியே தொடர முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வார இறுதி ஆங்கில நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இந்தப் பேச்சுவார்த்தைக்கு நிபந்தனைகளை விதிக்கவில்லை. எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தனியார் காணிகளை அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் சுவீகரிப்பது தொடர்பில் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்காக, அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள நாங்கள் முன்மொழிவுகளை முன்வைக்கிறோம். அத்துடன், சுயநிர்ணய உரிமையின் கீழ் சமஷ்டி முறையின் ஊடாக தீர்வை வழங்கிய பின்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கும் நாம் யோசனை முன்வைக்கிறோம்.

“எழுபத்தைந்து வருடங்களாக இவ்வாறான பேச்சுவார்த்தைகள், உடன்பாடுகள், இணக்கப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எந்தப் பயனும் இல்லை” என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

“ரணிலின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் உட்கார முடியாது. தமிழ் மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் அரசியலமைப்பு அடங்கிய விடயங்களை பேச்சவார்த்தைக்கு முன்னர் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

“ஒற்றையாட்சிக்குள் இருந்து கொண்டு திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு பற்றி பேச முடியாது என்றால், கலந்துரையாடலுக்கு முன்னர் ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் பரிந்துரைக்கிறார்.

ஏமாற்று வேலைகளை குறைப்பதற்கு நடுநிலையான மூன்றாம் தரப்பு செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி