மலையகத்தில் பாடசாலை மாணவர்களை போதைபொருள் பாவனையிலிருந்து காப்பாற்ற,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டு வருவதாக இ.தொ.காவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளd.

இதனடிப்படையில், நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் ஈடுப்படாதிருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக்  கொண்டுவந்திருந்தார்.

இதையடுத்து, இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒன்றுகூடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் காங்கிரஸ் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், மருதபண்டி ராமேஸ்வரன் மற்றும் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பொலிஸார் தரப்பில் மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

இத்தருணத்தில், நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் அனைத்துக்கும் அவ்வப் பிரதேச பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் குழு அமைத்து பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவிக்க கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கட்டளையை மீறும் பட்சத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மலையக தோட்டப் பகுதிகள், நகர் மற்றும் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையில் ஈடுப்படாது, அரசியல் ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் பொலிஸாரின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

“அதேநேரத்தில், தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் ஏற்படும் தொழிற்சங்கப் பிணக்குகளுக்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கக்கூடாது. அது தொழிற்சங்கங்கள் பார்த்துக்கொள்ளும்” என பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்த ஜீவன் தொண்டமான் எம்.பி, தொழிற்சங்கம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தோட்ட நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் தோட்டங்களுக்கு பொலிஸார் செல்லும் முன், அவ்விடயம் தொடர்பில் இ.தொ.காவுக்கு தெரிவித்து அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி