பணத்துக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்த உக்குவெல பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தோட்டங்களில்

வாழும் சிலர், உரிய போஷாக்கின்மை மற்றும் மருந்து வசதியின்றி நோயாளிகளாக மாறியுள்ள அவல நிலைமையொன்று தொடர்பில், நாட்டின் தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உக்குவெல பிரதேசத்துக்கு அவர்கள் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயமொன்றின் போதே இந்தத் தகவல்களை அவர்கள் திரட்டியுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகவும் இரகசியமான முறையில் தரகங்கள் மூலம் இளைஞர், யுவதிகள், வறுமை நிலையில் வாழும் வயது குறைந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மூன்று இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வரையிலான தொகையொன்றுக்கு அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று, அவ்வாறு விற்பனை செய்த சிலர் அந்தப் பத்திரிகைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக, தோட்டப்புற மக்கள் தங்களுடைய சிறுநீரகங்களை விற்பனை செய்வதாகவும் இதற்காக அவர்களின் வாழ்நாள் முழுவதுக்கும் தேவையான உதவிகளைச் செய்வதாகக் கூறியே சிறுநீரகங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை பெறப்பட்ட பின்னர் பெருமளவுத் தொகையைப் பெற்றுக்கொள்ளும் தரகர்கள், தமக்கான தொகையைப் பகுதியளவிலேயே பெற்றுக்கொடுத்ததாகவும் அதன் பின்னர் தாங்கள் குறித்து அவர்களில் எவரும் கவனிப்பதில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வசந்த ஜயசிங்க (43 வயது) நபர் ஒருவர், தன்னுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்கு முன்னரும் பின்னரும் எடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளின் தொகுதியொன்றைக் காண்பித்து, கீழ்கண்டவாறு தெரிவித்தார்.

'தற்போது என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. நூநா வந்து சொன்னார் இப்படி ஒரு வேலை இருக்கின்றது என்று. எங்களுக்கென்று வீடொன்று இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. மலசலகூடம் இல்லை. அதனால்தான் நான் அதற்கு இணங்கினேன். என்னுடைய மனைவி அதற்கு இணங்கவில்லை. அதனால், மனைவியின் கையெழுத்தையும் நானே போட்டு, சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டேன். சத்திர சிகிச்சை முடிந்து வீட்டுக்குக் கொண்டுவந்து விட்ட பின்னர் ஐந்து இலட்சம் ரூபாயைக் கையில் கொடுத்தனர்.

'சீறுநீரகத்தை வழங்கியது அநியாயம் என்று இப்போது தோன்றுகிறது. இருந்தாலும், நான் இல்லாத காலத்தில் என்னுடைய குடும்பத்தினர் இருக்க வீடு, மின்சாரம், நீர், மலசலகூட வசதிகள் இருக்குமல்லவா. இப்போது என்னால் என்னுடைய ஆடையைக்கூட ககழுவிக்கொள்ள முடியவில்லை. மூச்சுவாங்குகிறது. கொஞ்ச தூரம் கூட நடக்க முடியவில்லை' என்று குறிப்பிட்டார்.

இந்தச் சிறுநீரக விற்பனையில் ஈடுபட்ட எம்.திருச்செல்வம் என்பவர் தெரிவிக்க கருத்துக்கள் பின்வருமாறு,
'என்னுடைய மனைவி தீக்காயங்களுக்கு உள்ளானவர். இருக்கும் இந்த வீடும் அடகில் இருக்கிறது. மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அப்போது தான் தரகர் ஒருவர் வந்து, சிறுநீரகமொன்றைக் கொடுத்தால் ஐந்து இலட்சம் தருவதாகக் கூறினார். நான் சம்மதித்தேன். இருப்பினும், நான்கு இலட்சம் தான் வழங்கினார்கள். சிறுநீரகத்தைக் கொடுக்கும் போது, நோயாளியின் குடும்பத்தினர் எமக்கு உதவுவதாகக் கூறினர். ஆனால் இப்போது அவர்களுக்கு அழைப்பு எடுத்தால் எங்களோடு பேசுவதுகூட இல்லை.

'இப்போது என்னால் நடக்கவே முடியவில்லை. சாப்பிடவும் முடியவில்லை. மீண்டும் வீட்டை அடகு வைக்க நேர்ந்தது. வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் கஷ்டத்தோடு வேலை செய்கிறேன். சிறுநீரகத்தை எடுப்பதற்காக வீட்டிலிருந்தே வாகனத்தின் மூலம் அழைத்துச் சென்றாலும், சத்திர சிகிச்சையின் பின்னர் புறக்கோட்டைக்கு மாத்திரமே அழைத்துவந்து விட்டார்கள். அங்கிருந்து கஷ்டப்பட்டுதான் வீடு வந்து சேர்ந்தேன். என்னுடைய காயத்தின் நிலைமை மோசமடைந்தது. மருந்தும் இல்லை. இவ்வாறான மோசடிக்காரர்களிடம் யாரும் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டார்.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தகவலளிக்கையில், மேற்கண்டவாறு சிறுநீரகங்களை விற்பனை செய்தவர்களில் இருவர் உயிரிழந்தனர் என்று குறிப்பிட்டார். அத்துடன், மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த சுமார் நூறு பேர் வரையில் சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளனர் என்றும் அவர்களில் பெருமளவானோர் தற்போது கடும் நோயாளிகளாகக் காணப்படுகின்றனர் என்றும் ஜெகநாதன் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ சந்திரகுப்தவிடம் விசாரிக்கப்பட்ட போது, உக்குவெல பிரதேசத்தில் இடம்பெற்ற சிறுநீரக விற்பனை தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து இது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் குறித்து போதுமான சாட்சியங்கள் இல்லை என்றும் போதுமானளவு சாட்சியங்கள் கிடைக்கப்பெறுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்க சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அதிகாரம் உள்ளதென்றும் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி