ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு நகரில் உள்ள பல இடங்களை அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு, செப்டெம்பர் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இன்று (01) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச இரகசிய சட்டத்தின் கீழ், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பெயரிட்டு கடந்த 23ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதி, உயர் நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலக அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சு, இராணுவத் தலைமையகம், கொம்பனி வீதி விமானப்படைத் தலைமையகம், மல்பாரா பிரதமரின் செயலாளர் அலுவலகம், கொள்ளுப்பிட்டி கோவில் வளாகம், பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் ஆகியன அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய எதிர்ப்பு கிளம்பியது.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என்றும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படுவதாகவும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பல தரப்பினர் உயர் நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி