மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
அந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய பல பயணிகளின் துயரமான படங்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் மைனகுரி அருகே குவாஹட்டி - பிக்கானர் அதிவிரைவு ரயிலின் 12 பெட்டிகள் இன்று தடம் புரண்டன. இதில் குறைந்தது ஐந்து பேர் பலியானார்கள், 45 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிடிஐ செய்தி நிறுவன தகவல்கள் கூறுகின்றன.
இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாளை காலை விபத்து நடந்த பகுதிக்கு செல்லவருக்கிறார். ரயில் தடம் புரண்டதால் காயமடைந்த 50 பேர் மீட்கப்பட்டதாக மேற்கு வங்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 24 பேர் ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனைக்கும், 16 பேர் மொய்னகுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்த பயணிகள் சிலிகுரியில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்படுவார்கள் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடம் புரண்ட பெட்டிகளுக்குள் இன்னும் சில பயணிகள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், சிதைந்த பெட்டிகளை வெட்டுவதற்கு எரிவாயு கட்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நிலைமையை "தனிப்பட்ட முறையில்" கண்காணித்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோதியிடம் பேசி மீட்புப் பணிகள் குறித்து விளக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.












