இலங்கை போக்குவரத்து சபையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின்போது மதிப்பிடப்பட்ட தொகையைவிட 90 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழு கண்டறிந்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை 2018ஆம் ஆண்டு 139 கணினிகள், 74 மடிக்கணினிகளை ஒரு கோடியே 52 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு கொள்முதல் சபை மதிப்பீடு செய்திருந்தபோது, இத்தொகையைவிட அதிகமான தொகைக்கே கணினிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய 800 கணினிகளும், 47 மடிக்கணினிகளும் 11 கோடியே 33 இலட்சத்து மூவாயிரத்து 750 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இதனால் 2018ஆம் ஆண்டு கணினிகளின் கொள்வனவுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையைவிட 8 எட்டு கோடியே 99 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபா போக்குவரத்து சபையின் கணக்கின் ஊடாக செலவு செய்யப்பட்டிருப்பதாக கோப் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை தொடர்பான 2017, 2018ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு (06) கூடியபோதே இந்த விடயம் வெளிப்பட்டது.

ertret

உரிய செயல்முறை இல்லாமல் பணத்தை செலவழிப்பது குறித்து கோப் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பாழடைந்த உபகரணங்கள்

அத்துடன், 125 சொகுசு பஸ்களுக்கு கமரா மற்றும் ஜீ.பி.எஸ் கட்டமைப்பைப் பேணுவதற்குத் தேவையான கருவிகளைக் கொள்வனவு செய்ய தனியார் நிறுவனத்துடன், 33,628,840 ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதும் இந்தக் கருவிகளில் சிலவற்றைத் தவிர ஏனையவை இயங்கும் நிலையில் காணப்படவில்லையென்றும் கோப் குழுவில் தெரியவந்தது.

விசேடமாக இந்த பஸ்களில் பணியாற்றுபவர்கள் வேண்டுமென்றே சேதத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2018ஆம் ஆண்டு கொள்முதல் திட்டத்துக்கு அமைய 1000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்களுக்கு 35 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிப்பாளர் சபையின் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் 2018ஆம் ஆண்டு 2000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய 75,900,000 ரூபா செலவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய அனுமதி இன்றி 1000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதுடன், இந்தக் கொள்வனவின் ஊடாக எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறாமை தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.

இது தொடர்பில் ஒரு மாதத்துக்குள் கோப் குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அத்துடன், பணிப்பாளர் சபையின் பதவிகள் சிலவற்றின் குறைபாடுகள் குறித்தும், பயன்பாட்டில் இருக்கும் 5921 பஸ்களின் எண்ணிக்கை தொடர்பிலும், தற்பொழுது பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள பஸ்கள் மற்றும் 10 வருடங்கள் பழைமைவாய்ந்த 2742 பஸ்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கோப் குழுக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, மதுர விதானகே, பிரேம்நாத்.சி தொலவத்த ஆகியோரும், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், போக்குவரத்து சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி