புதிய தாலிபன் அரசைக் கட்டுப்படுத்த நினைக்கும் சில மேலை நாட்டு சக்திகளுக்கு, பாகிஸ்தான் மத்தியஸ்தராக விளங்கும் என்று நம்பப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு தனித்துவமானது. இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் எல்லை 2570 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இரு நாடுகளுக்கும் வணிகத் தொடர்பு உண்டு. பல மரபுசார்ந்த, இனக்குழு சார்ந்த, மதரீதியான தொடர்புகளும் உண்டு.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், "இரு நாடுகளும் பிரிக்க முடியாத சகோதரர்களைப் போன்றவை" என்று குறிப்பிட்டார். சில நாடுகள் இஸ்லாமாபாத்துடன் இருக்கும் உறவைப் புதுப்பிக்க விரும்புகின்றன. அங்கு கலவையான உணர்வுகளே தோன்றுகின்றன.

ஜிஹாதி தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஒரு வலுவான நட்பு நாடு என்று சொல்லிவிடமுடியாது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், பாகிஸ்தான் தாலிபனை ஆதரிக்கிறது என்று நெடுங்காலமாகவே குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் இதை மறுக்கிறது.

ஆனால் மேலை நாடுகளைச் சேர்ந்த பல தூதர்கள், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றவும், உதவிகள் வழங்கவும், மிதமான ஓர் ஆட்சி வழங்கவும் தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள். இதுபோன்ற ஒரு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அங்கிருக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளுடன் பேசவேண்டியிருக்கும்.

தாலிபன் விவகாரத்தில் இப்போது அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவோ தலையிடவோ முடியுமா?

ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபனுடனான பாகிஸ்தானின் உறவு எப்படிப்பட்டது?

ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபனுடன் பாகிஸ்தான் ஒரு மழுப்பலான உறவில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் திட்டமிட்டு அமெரிக்கா மீது நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, "தீவிரவாதத்துக்கு எதிரான போரில்" அமெரிக்காவின் நட்பு நாடாக பாகிஸ்தான் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.

ஆனால் இது நடந்துகொண்டிருக்கும்போதே, பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவுத் துறையினர் பலரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தாலிபன் உள்ளிட்ட இஸ்லாமியவாத அமைப்புகளோடு தொடர்பில் இருந்ந்தனர். சில நேரங்களில் இந்தத் தொடர்பு பொருட்கள் மற்றும் நிதியுதவியை அளிக்கும் அளவுக்குத் தீவிரமானதாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தாலிபன்கள் மீதான இந்தியாவின் அணுகுமுறை மாறி வருவதாக தெரிகிறது.

தாலிபன்கள் மீதான இந்தியாவின் அணுகுமுறை மாறி வருவதாக தெரிகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின் தாலிபன்கள் மீதான இந்தியாவின் அணுகுமுறை மாறி வருவதாக தெரிகிறது.

இந்தியாவுக்கு ஆதரவான அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அங்குள்ள தொடர்பை பாகிஸ்தான் விடவில்லை என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் எந்த அளவுக்கு எத்தனை காலமாக தாலிபனுக்கு ஆதரவு தந்திருக்கிறது என்பதில் பல சர்ச்சைகள் நிலவுகின்றன.

ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தாலிபன்கள் அதிகாரத்தில் இருந்தபோது, அந்த அரசை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த மிகச் சில நாடுகளில் பாகிஸ்தானும்ஒன்று.சென்ற மாதம் காபூல் நகரைத் தாலிபன்கள் கைப்பற்றியபோது, அவர்கள் "அடிமைத்தளையை உடைக்கிறார்கள்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் எதைப் பற்றிக் கவலைப்படுகிறது?

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் தாலிபனுக்குப் பாகிஸ்தான் ஆதரவு தந்திருக்கிறது என்றாலும், காபூல் நகரை அவர்கள் கைப்பற்றியதைப் பாகிஸ்தான் இயல்பாக எடுத்துக்கொள்ளும் என்று சொல்லிவிட முடியாது. ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் இஸ்லாமியவாத தீவிரவாத அமைப்புகள் கடந்த பல வருடங்களாகவே பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியிருக்கின்றன. இதில் பாகிஸ்தானின் குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இரட்டை கோபுர தாக்குதல்: 9/11 அன்று என்ன நடந்தது?

இப்போது காபூலில் அமைந்திருக்கும் புதிய அரசு, அல்-கய்தா மற்றும் அதன் உள்ளூர் அமைப்பான ஐ.எஸ்-கே ஆகியவற்றைத் தகர்க்கவேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. தாலிபன்கள் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும் என்றும், கட்டுப்பாடு இல்லாமல் ஆப்கானிஸ்தான் இயங்குவதை அவர்கள் தடுக்கவேண்டும் என்றும் பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.

பாகிஸ்தானுக்கு அகதிகள் பிரச்னையும் முக்கியமானதாக இருக்கிறது. முந்தை போர்க்காலங்களிலிருந்து ஏற்கனவே 3 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானுக்கு வந்திருக்கிறார்கள். சிதைந்து போயிருக்கிற தனது பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு இதற்கு மேல் வரும் அகதிகளைப் பாகிஸ்தானால் கவனித்துக்கொள்ள முடியாது.

பிரிட்டனுக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மொவாஸம் அஹ்மத் கான் பிபிசி டுடே நிகழ்ச்சியில் பேசும்போது, "இப்போது எங்களால் புதிய அகதிகளை சமாளிக்க முடியாது. அதனால்தான் இருதரப்பும் அமர்ந்து பேசி இது நடக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோ," என்றார்.

மேலை நாடுகளோடு உள்ள உறவை இது எவ்வாறு பாதிக்கும்?

பாகிஸ்தானுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவுநிலைகள் இல்லை.

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள நட்பு மோசமான நிலையில் இருக்கிறது. அமெரிக்காவின் அதிபரான பிறகு பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதற்குக் கூட ஜோ பைடன் மறுத்துவிட்டார்.

ஜோ பைடன்

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹெச்.ஆர்.மெக்மாஸ்டர் இந்த வாரம், வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஒரு மாநாட்டில் பேசினார். அப்போது அவர், "ஜிஹாதி அமைப்புகளுடனான தனது தொடர்பை பாகிஸ்தான் துண்டித்துக் கொள்ளாவிட்டால் அது தீண்டத்தகாத நாடாக ஒதுக்கி வைக்கப்படும்" என்றார்.

"பாகிஸ்தான் ஒரு நட்பு நாடு என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அதை நிறுத்தவேண்டும். இந்த சக்திகளுக்கு உதவுவது, பயிற்சி தருவது, மேலாண்மை செய்வது ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் நமக்கு எதிரான நாடாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களது வெளியுறவுக் கொள்கையின் ஓர் அங்கமாகவே இந்த ஜிஹாதி தீவிரவாத அமைப்புகளைப் பயன்படுத்துகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்காவின் இந்த பார்வையை மீறியும் மேலை நாடுகள் பாகிஸ்தானை நாடியிருக்கின்றன. பிரிட்டன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இஸ்லாமாபாத்துக்குச் சென்று வந்துள்ளனர். விரைவில் இந்தப் பட்டியலில் இத்தாலியும் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாலிபன்கள் மீது பாகிஸ்தானுக்கு கொஞ்சம் அதிகாரம் இருக்கிறது என்று ராஜதந்திரிகள் நம்புகிறார்கள் - அல்லது குறைந்தபட்சம் அப்படி ஒரு எதிர்பார்ப்பாவது இருக்கிறது. இதைத்தவிர, பாகிஸ்தானை ஒதுக்கிவைத்தால் அது சீனா பக்கம் சாயும் என்ற அச்சமும் நிலவுகிறது.

பாகிஸ்தானால் தாலிபனின் நிலைப்பாடுகள்மீது ஆதிக்கம் செலுத்த முடியுமா என்பதுதான் இப்போதைய முக்கியக் கேள்வி.

புதிய அரசின் தலைவராக எதிர்பார்க்கப்படுகிற முல்லா அப்துல் கானி பராதர், பாகிஸ்தானின் சிறையில் காலம் கழித்தவர். அவர் எந்த அளவுக்கு பாகிஸ்தானின் சொற்களைக் கேட்பார் என்பது போகப் போகத்தான் தெரியும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி