ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், அந்த விடயத்தை முன்னிட்டு  www.ekneligodaforum.org  என்ற பெயரில் இணையதளம் ஒன்றை,  அறிமுகப்படுத்துவதற்கு "எக்னலிகொட மன்றம்" நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனவரி 25, 2021 திங்கள், மாலை 4 முதல் 6 மணி வரை, பொரளை, டொக்டர் எம்.எம் பெரேரா அரங்கில் இணையதள அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"அந்த மனித முன்னோடியை எங்களிடமிருந்து பிரித்து  11 வருடங்கள் ஆகின்றன!" இதுவே இணையதளத்தின் தொனிப்பொருள்.

கடந்த 11 வருடங்களாக  காணாமல் போயுள்ள எக்னெலிகொடவிற்கு நீதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தான் முனனெடுத்த அனைத்து முயற்சிகள் மற்றும் செயற்பாடுகளையும், பிரகீம் இலங்கையில் இருந்த காலத்தில் எழுதிய கட்டுரைகள், வரைந்த ஓவியங்கள் என அனைத்தையும் சேர்த்து  இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளதாக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலருமான சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமல் போன சிங்கள, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய தகவல்களும் இணையதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக  சந்தியா எக்னலிகோடா மேலும் குறிப்பிடுகிறார்.

நாடு கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில், இணையதள அறிமுக நிகழ்விற்கு ஏராளமானவர்களை பங்கேற்கச் செய்வது கடினம் என்பதால், அன்றைய தினம் பேஸ்புக் மூலமான நேரடி ஒளிபரப்பில் இணைந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பற்றி  ஆராய்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் தேடுவோர் இந்த இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமென சந்தியா எக்னெலிகொட குறிப்பிட்டுள்ளார்.

”உலகத்திலிருந்து காணாமல் ஆக்கப்பற்றவர்களைப் பற்றிய நினைவலைகளை எழுதும் – எழுப்பும் - பாதை” வெளியீட்டின்போது ஒன்றிணையுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010 அன்று  பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டார்.

காணாமல் போன தனது கணவரைத் தேடும் முயற்சியில் சந்தியா எக்னெலிகொட உலகின் மிக உயர்ந்த விருதையும் பெற்றார்.

sandya 265

இலங்கையில் போரின்போதும் காணாமல் போன ஆயிரக்கணக்கான உறவினர்கள் மற்றும் மோதலுக்கு முன்னரான கலவரங்களின் போதும் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் அடையாளமாக மாறிய பெண்ணான சந்தியா எக்னெலிகொடவுக்கு 2017ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவினால் சர்வதேச வீரதீர பெண் விருது வழங்கப்பட்டது.

காணாமற்போன தனது கணவர் பிகீத் எக்னெலிகொட பற்றிய உண்மையை வெளிப்படுத்த அதிகாரிகள் தடையாக இருந்தபோதிலும், 80 தடவைகளுக்கு மேல் நீதிமன்றத்திற்கு செல்வதில் அவர் காட்டிய தைரியம் காரணமாகவே அவர் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதாக அமெரிக்க உதவி வெளிவிவகார செயலாளர் தோமஸ் ஏ செனொன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி