யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வாய்வு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் முழுமையான நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விஞ்ஞான வழிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (21) எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் பல கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வுகளில் இதுவரை அண்ணளவாக 574 பேரின் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வாய்வும் கண்காணிப்புக் கட்டமைப்பும்
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் வழிநடத்தலில் நடைபெறும் இந்த அகழ்வாய்வுப் பணிகள் பின்வரும் தரப்பினரின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன:
-
யாழ்ப்பாண நீதவான் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள்.
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன்.
-
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் குற்றச் செயல் தடயவியல் பிரிவு (SOCO) அதிகாரிகள்.
-
2025 ஏப்ரல் 29 ஆம் திகதிய நீதிமன்ற அனுமதிக்கு அமைய, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) ஒரு கண்காணிப்பாளராக இதில் தீவிரமாக இணைந்துள்ளது.
தொல்லியல் அறிக்கையும் சட்ட வைத்திய அறிக்கையும்
பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ளது எலும்புக்கூட்டு எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ள தொல்லியல் பின்னணி குறித்த நீதிமன்றத் தொல்லியல் அறிக்கையே தவிர, சட்ட வைத்திய அறிக்கை அல்ல என அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
மரணத்திற்கான காரணம் மற்றும் மரணம் நிகழ்ந்த விதம் குறித்த சட்ட வைத்திய அறிக்கையைச் சமர்ப்பிக்கும் பணிகளை, நீதவானின் உத்தரவிற்கமைய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன் மற்றும் அவரது குழுவினர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.
DNA பரிசோதனைகளுக்குச் சர்வதேச ஒத்துழைப்பு
இலங்கையில் உயர்தர DNA பகுப்பாய்வு வசதிகள் இல்லாத காரணத்தால், நீதிமன்றத்தினால் உத்தரவிடப்படும் பொருத்தமான சந்தர்ப்பத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்களை அடையாளம் காண்பதற்கும் DNA பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் மாதிரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும், சர்வதேச தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் முழுமையாகத் திறந்த மனதுடன் உள்ளதாக ஹர்ஷண நாணயக்கார உறுதிப்படுத்தினார்.
விஞ்ஞான ரீதியான சான்றுகளின் அடிப்படையில் உண்மையைக் கண்டறிவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதுமே அரசாங்கத்தின் ஒரே நோக்கமாகும் என அவர் வலியுறுத்தினார். சாதி, மதம் அல்லது குலம் பாராது சட்டத்திற்கு அமைவாக இவ்விசாரணைகள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவித்த நீதி அமைச்சர், இந்த உணர்வுபூர்வமான விடயத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம் எனவும் சகல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தார்.


