இலங்கை அதிகாரிகள் பொதுமக்கள் மீது வன்முறை மற்றும் சித்திரவதையைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகக் கவலைகள் அதிகரிக்கும் நிலையில் ஸ்காட்லாந்து பொலிசார் இலங்கைப் பொலிசாருக்கு பயிற்சி அளிக்கும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளனர்.லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிசார் பிரிட்டனைச் சேர்ந்த சில தனியார் கூலிப்படைகள் இலங்கையில் செயல்பட்டமைத் தொடர்பில் விசாரித்து வரும் வேளையில், இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிசாரின் சிறப்பு அதிரடிப் படையினருக்கு வன்முறை, சித்திரவதை மற்றும் ஆட்கள் காணாமல் போவது ஆகியவற்றுடன் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கும் சூழலில், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரையுள்ள இந்த புதுப்பிக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தனக்கு எதிரானவர்கள் மீது அச்சுறுத்தி பணியவைக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுத்தது எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிலையில், அதன் பொலிசாருக்கு அளிக்கும் பயிற்சியளிக்கும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து ஸ்காட்லாந்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

`போர் குற்றங்களிலிருந்து தப்பித்த பிரிட்டிஷ் கூலிப்படையினர்-கீனி மீனி` எனும் புத்தகத்தை எழுதியுள்ள ஃபில் மில்லர், ``இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு, ஸ்காட்லாந்து பொலிசார் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவது ஆச்சரியமாகவுள்ளது` என்று கூறுகிறார். அந்தக் கூலிப்படையால் பயிற்சி அளிக்கப்பட்ட இலங்கையின் துணை இராணுவக் குழுவொன்று தமிழ்க் கிராமங்களை தீக்கிரையாக்கியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை தமது நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள ஸ்காட்லாந்து பொலிசார், அந்த ஒப்பந்தத்தின் மதிப்பை வெளியிடவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான இந்தப் பயிற்சிக்கு பிரிட்டிஷ் தூதரகம் நிதியுதவி அளிக்கிறது. ``ஐ நாவின் நீடித்திருக்கக் கூடிய வளர்ச்சித் திட்ட இலக்குகள், குறிப்பாக பாலின சமன்பாடு, சமாதானம் மற்றும் நீதி, வலுவான நிறுவனங்கள்ஒத்துழைப்புகள் மூலம் முன்னெடுத்து இலங்கை மனித உரிமைகள் அடிப்படையில் அதற்கு ஆதரவளிக்கிறது`` என்று ஸ்காட்லாந்து பொலிசாரின் தலைமை அதிகாரி டேவிட் டன்கன் கூறுகிறார்.

தாம் இலங்கையில் செய்யும் பணிகளை ஸ்காட்லாந்து அரசு அறிந்துள்ளது என்று ஸ்காட்லாந்து பொலிசார் கூறுகின்றனர். வெளிநாடுகளில் தாங்கள் அளிக்கும் பயிற்சி குறித்து ஸ்காட்லாந்து பொலிஸ் ஆணையம் மற்றும் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சிக்கான அலுவலகம் அறிந்துள்ளன என்றும் ஸ்காட்லாந்து பொலிஸ் கூறுகிறது. கடந்த காலங்களில் இந்தியா, நமீபியா, மலாவி, பாகிஸ்தான் மற்றும் ஜாம்பியா நாட்டுப் படைகளுக்கும் தாங்கள் பயிற்சி அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

``ஸ்காட்லாந்து தேசியக் கட்சியான எஸ்.என்.பி கடந்த காலங்களில் இங்கிலாந்து பொலிசார் பஹ்ரைன் போன்ற அடக்குமுறை நாடுகளுக்கு பயிற்சி அளித்ததை கண்டித்துள்ளது`` என்று கூறும் ஃபில் மில்லர், இலங்கையில் தமது விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்ததற்காகத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் நிலையில் எவ்வாறு அந்நாட்டுடன் இணைந்து செயல்பட ஸ்காட்லாந்து பொலிசாரை ஸ்காட்டிஷ் அமைச்சர்கள் அனுமதித்தனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிப்பது, சமூகப் பாதுகாப்பைப் மேற்கொள்வது தொடர்பில் இலங்கை பொலிசாருக்கு பயிற்சி அளிக்க எவ்வளவு நிதி அளிக்கப்படுகிறது என்பதை ஸ்காட்லாந்து பொலிசார் தெரிவிக்க மறுத்தாலும் முன்னர் அப்படியான பயிற்சி மூலம் அவர்கள் £700,000 வரை ஈட்டியுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கத்தோலிக்க சமாதான அறக்கட்டளையான பேக்ஸ் கிறிஸ்டி கோரியுள்ளது. ஸ்காட்லாந்து பொலிசிக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவு ``கவலையளிக்கிறது`` என்று அந்த அமைப்பின் மரியன் பேலிஸ்ட்டர் கூறுகிறார். சர்வதேச அமைதி இயக்கமொன்றின் உறுப்பினர் எனும் வகையில் இது தொடர்பில் தாங்கள் பல மட்டங்களில் கவலையடைவதாக அவர் தெரிவித்தார்.

``அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு அதிலும் குறிப்பாக தமது பிரஜைகளுக்கு எதிராக வன்முறையை முன்னெடுக்கும் ஒரு நாட்டை தமது அரசு எப்படி மன்னிக்க முடியும் என்று ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் நீல் ஃபிண்ட்லே கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையின் சிறப்புப் படைகள் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை முன்னெடுத்து வருகிறது என்று அவர் கூறுகிறார்.

ஸ்காட்லாந்து பொலிசாரின் இந்த முன்னெடுப்பைச் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டியும் கடுமையாக விமர்சித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி