ஐமக் முன்பே ஒரு முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியிருக்கிறார்ஆப்கானிஸ்தான் மத்திய மாகாணமான கோரில் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிஸ்மில்லா ஐமக் ஒரு உள்ளூர் வானொலி நிலையத்தின் ஆசிரியராக இருந்தார். ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களில் இவரையும் சேர்த்து ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன் நடந்த ஒரு கொலை முயற்சியிலிருந்து ஐமக் தப்பியதாக 'ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்' என்கிற அமைப்பு கூறியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்பவர்கள் மற்றும் அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட பல கொலைச் சம்பவங்களுக்கு, எந்த ஆயுதமேந்திய குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், இப்படிப்பட்ட கொலைகளில் பெரும்பாலானவற்றுக்கு தாலிபன்தான் பொறுப்பு என்கின்றனர்.

பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதை ஐ.நா சபை, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகள் கண்டித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையில், அடுத்த வாரம் பேச்சு வார்த்தை மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்த இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போதும், வன்முறை தொடர்கிறது.

சமீபத்தில் இலக்கு வைத்து தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் பட்டியல் நீளமானது.

கஜினி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஹ்மதுல்லா நெக்சாத் கடந்த மாதம் கிழக்கு நகர்புறத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இனிகாஸ் தொலைக்காட்சி & வானொலியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் மலாலா மைவான்ட், சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால், அவர் பணிக்குச் செல்லும் போது தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம், பிரபலமான யாமா சியாவஷ் என்கிற தொலைக்காட்சிப் பத்திரிகையாளர், காபூல் நகரத்தில் அவரது வீட்டருகில், அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த வெடி குண்டால் கொல்லப்பட்டார்.

ரேடியோ லிபர்டி என்கிற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அலியாஸ் தயி என்கிற பத்திரிகையாளர், கார் வெடி குண்டால் லஷ்கர் கா எனும் பகுதியில், கடந்த நவம்பர் மாதம் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானின் முதல் பெண் இயக்குநர்களில் ஒருவரான சபா சஹர் காபூல் நகரத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டார். அந்த தாக்குதலில் இருந்து அவர் தப்பித்தது நினைவுகூரத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி