இலங்கையில் உள்ள குடும்பங்களில் 16 சதவீதமானோருக்குப் போதிய, சத்தான உணவு கிடைப்பதில்லை என உலக உணவுத் திட்டம்
சுட்டிக்காட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தனது சமீபத்திய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.
பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்குப் போதிய, சத்தான உணவு கிடைப்பதில்லை எனவும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்ட குடும்பங்கள், பசியைப் போக்கிக் கொள்வதற்காக உண்ணும் உணவின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், ஒரு வேளை உணவிற்காக உண்ணும் உணவின் அளவைக் குறைப்பதற்கும் அல்லது தங்களுக்கு விருப்பமான உணவை உண்பதைக் குறைப்பதற்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இலங்கைக் குடும்பங்களில் நான்கில் ஒரு பகுதியினர் போதியளவு உணவு வேளைகளை எடுத்துக்கொள்வதில்லை எனவும், இந்தக் காரணங்களால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வயதுக்குரிய எடை இல்லாததால் ஏற்படும் மந்தபோசணை அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிடுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே 12.2 சதவீதமாக இருந்த மந்தபோசணை, 2021 முதல் 2024 வரையான காலப்பகுதியில் 17 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிடுகிறது.
இலங்கைக்கு அதன் கடந்த காலத்திலிருந்து மீள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், நாட்டில் உள்நாட்டுப் போர் நிலவிய காலம் உட்பட இதுவரை இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம், பாதுகாப்புப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதக் குழுக்களுக்கு உள்ள பொறுப்பை அந்தந்தத் தரப்பினர் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதன் மூலம் அதற்கு ஒரு ஆரம்பத்தை வழங்க முடியும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் மோசடி, ஊழல் காரணமாகவும் இலங்கையர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிடுகிறார்.
பொருளாதார நெருக்கடியுடன், 2021 முதல் 2024 வரையான காலப்பகுதியில் நாட்டின் வறுமை இரண்டு மடங்காக, அதாவது 24.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், அது உணவுப் பாதுகாப்பின்மைக்கும் காரணமாக அமைந்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிடுகிறார்.
பெருந்தோட்ட மலையகத் தமிழ் சமூகம் உட்பட அனைத்து இலங்கையர்களுக்கும், குறிப்பாக வறுமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய பாதிப்புக்குள்ளாகும் நிலமைகளின் கீழ் வாழும் நபர்களுக்கும், பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போதைய கடன் சுமையின் கடுமையான தாக்கங்கள் குறித்தும் இந்த அறிக்கை பகுப்பாய்வு செய்துள்ளது.