அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின்
அன்கரேஜில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தில் சந்தித்தனர்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3 மணித்தியாலங்களுக்கு அண்மித்த நேரம் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் இரு ஜனாதிபதிகளும் கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
கலந்துரையாடலின் போது தாங்கள் எந்தவொரு உடன்படிக்கையிலும் கையெழுத்திடவில்லை என அமெரிக்க ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.
எனினும், கலந்துரையாடல்கள் பயனுள்ளதாக இருந்ததாகவும், அதன் மூலம் கலந்துரையாடல்களில் முன்னேற்றம் காணப்பட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உக்ரைன் போர் முதல் அணு ஆயுத ஒப்பந்தம் வரையான தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும், அது தொடர்பான எந்த விபரங்களும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படவில்லை.
இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் நேட்டோ தலைவர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.
உக்ரேனியர்களும் ஐரோப்பியர்களும் சமாதான முன்னெடுப்புகளுக்கு இடையூறு விளைவிக்க மாட்டார்கள் என தாம் நம்புவதாக ரஷ்ய ஜனாதிபதி அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவிற்கு அதன் சொந்த நலன்கள் உள்ளன என்பதை ட்ரம்ப் புரிந்துகொண்டார் எனவும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
ரஷ்ய-உக்ரைன் போர் மோதல்கள் தொடர்பாக ஒரு போர் நிறுத்தத்தை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி இந்த சந்திப்பில் இணைந்த போதிலும், அது தொடர்பான எந்தவொரு முடிவும் இன்றி கலந்துரையாடல்கள் முடிவடைந்தன.
அடுத்த கலந்துரையாடலை ரஷ்யாவின் மொஸ்கோவில் நடத்துமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு ரஷ்ய ஜனாதிபதி பரிந்துரைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 05 மணித்தியாலங்கள் தங்கியிருந்த பின்னர் ரஷ்ய ஜனாதிபதி அமெரிக்காவிலிருந்து வெளியேறும் காட்சியையும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.