தம்புளை - இனாமலுவ வனப்பகுதியின் திகம்பதஹ பகுதியில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று யானைகளின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு யானையின் தந்தங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த யானை இறப்புகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனல்.
காட்டு யானை - மனித மோதலைத் தீர்க்க தீர்வு யாது?
இதேவேளை, காட்டு யானை - மனித மோதலைக் குறைக்கப்பதற்காக 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தாதிருக்கிறீர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (22) பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பல ஆண்டுகளாக இந்த நாட்டில் மனித - யானை மோதல்களின் தீவிர போக்கையும், காட்டு யானை பாதுகாப்பில் நிலவி வரும் சிக்கலான சூழ்நிலையையும் நாம் கண்டிருக்கிறோம். மனித-யானை மோதல்களால் அண்மைய நாட்களில் மனித உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள், பயிர் அழிவுகள் மற்றும் யானையின் உயிரிழப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.
இருப்பினும், இந்த மோதல்களால் ஏற்படும் பாதகம் விளைவிக்கும் சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான பொருத்தமான நிலைபேறான வேலைத்திட்டத்தை இன்னும் ஆரம்பிக்க முடியவில்லை என்பது அவதானிக்கப்பட்டதால், நீண்டகாலமாக நிலவி வரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைக் கேட்டறியும் நோக்கத்துடன் பின்வரும் கேள்விகளைக் கேட்கிறேன்.
கேட்கப்பட்ட கேள்விகள்,
01. நமது நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறித்து சமீபத்தில் எத்தனை மக்கள் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன? அந்தத் தரவுகளை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா? இதன்படி, நாட்டில் காணப்படும் மொத்த யானைகளின் சதவீதம் யாது?
02. காட்டு யானை - மனித மோதலைத் தீர்க்க 2020 இல் வகுக்கப்பட்ட தீர்வு யாது? இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
03. குறித்த திட்டத்தை செயல்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எந்த காலக்கெடுவிற்குள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
04. கடந்த 5 வருடங்களில் மனித - யானை மோதலால் எத்தனை மனித உயிர்கள் மற்றும் காட்டு யானைகள் பலியாகியுள்ளன அவை யாவை?
05. இதனால் ஏற்படும் மனித உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் பயிர் சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு ? இதைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் யாவை?
06. காட்டு யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க காணப்படும் சட்டங்கள் யாவை? இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் யாவை?
07. விலங்கின நலன் பேணல் சட்டம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
08. காட்டு யானை - மனித மோதலைக் குறைக்க வனஜீவராசிகள் திணைக்களத்தில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்கள் தலைமையிலான பணியாளர்கள் (பௌதீக/மனித வளங்கள்) வனஜீவராசிகள் வலய மட்டத்தில் எவ்வளவு ? இது போதும் என்று அரசாங்கம் கருதுகிறதா? போன்றவனாகும்.