இலங்கையில் புதிய வகை 'COVID-19' இன் பரவும் அபாயம் இல்லாததால் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த
வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தொற்றுநோயியல் துறையின் தரவுகளின் அடிப்படையில் சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக பல ஆசிய நாடுகளில் 'COVID-19' தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இந்த நோயைச் சமாளிக்கும் திறன் அங்கு குறைவாக காணப்படுவதுடன் பல காரணிகள் இந்த பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் தேசிய அளவில் தயார்படுத்தலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் 'COVID-19' க்கான மருத்துவ மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது 'COVID-19' நோயாளிகளில் அதிகரிப்பு நாட்டினுள் இல்லை என்றும், இலங்கையில் ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் காண தேவையான ஆய்வக கண்காணிப்பு அமைப்பும் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், முதியவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மற்றும் நாள்பட்ட நோய் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அடிக்கடி கை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் உள்ளிட்டவை எல்லா நேரங்களிலும் அடிப்படை சுகாதார நடைமுறைகள் மற்றும் சுவாச நெறிமுறைகளை பின்பற்றுமாறும் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.