மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், அதற்கு ஈடாக நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று,
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கான திட்டங்கள் தொடர்பான விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அப்படி நடந்தால், திருத்தம் செய்யப்படும் விதம் அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும், சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டின் இரண்டாவது மின் கட்டணத் திருத்தம் குறித்த பொது ஆலோசனை நாளை தொடங்குகிறது. அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இது முன்னெடுக்கப்படும் என்று, பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூன் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிப்பதற்கான திட்டத்தை, சமீபத்தில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு இலங்கை மின்சார சபை அனுப்பி வைத்தது.
இந்தச் செலவுகளை ஈடுகட்ட மின்சாரக் கட்டணங்களை அவசரமாக சரிசெய்ய வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையின் பின்னணியில் இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது.