தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சிமன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட, எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளன.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கொழும்பு மலர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
எதிர்காலத்தில் திசைகாட்டிக்கு எதிரான அனைத்து குழுக்களுடனும் கலந்துரையாடல்கள் மூலம் அதிகாரத்தை நிறுவுவதோடு கூடுதலாக இணைந்து செயற்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி, அரசாங்கத்தை அமைக்கும் உள்ளூராட்சிமன்றங்களுக்கான பெயர்ப் பட்டியலைத் தயாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் நாளை (15) கூடத் திட்டமிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய பொதுஜன பெரமுன சார்பில் அனுர பிரியதர்ஷன யாப்பா, தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அசங்க நவரத்ன, சுகீஸ்வர பண்டார, வீர குமார திஸாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரமித்த பண்டார தென்னகோன், பிரேமநாத் சி.தொலவத்த, நிமல் லன்சா, மொஹமட் முஸம்மில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
உள்ளூராட்சிமன்றங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டங்களைக் கூட்டுவதற்கான பணி, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திசைகாட்டிக்கு எதிரான அனைத்து குழுக்களுடனும் கலந்துரையாடல்கள் மூலம் அதிகாரத்தை நிறுவுவதோடு மட்டுமல்லாமல், இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.