தற்போது (06) நடைப்பெற்று வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, இதுவரை உத்தியோகபூர்வ
வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும், அவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இதுவரை உத்தியோகபூர்வ வாக்களார் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தால், இன்று உப தபால் அலுவலகங்கள் திறந்திருக்கும் எனவும், அங்கு சென்று தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்” எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வாக்காளர் அட்டை பெற முடியாதவர்களும் எவ்வித தடையுமின்றி வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கை செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க,
"வாக்காளர் அட்டை இல்லை என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இது கட்டாயமான ஆவணம் அல்ல. இது இல்லையெனினும் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது. வாக்கு செலுத்துவதற்கு மிக அவசியமானது அடையாள அட்டை ஆகும். இது தேசிய அடையாள அட்டையாக இருக்கலாம். இல்லையெனில், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவையாக இருக்கலாம். நீங்கள் ஓய்வு பெற்றவர் என்றால், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம். மேலும், சமூக சேவைகள் திணைக்களத்தால் பிரதேச செயலாளர்கள் மூலம் வழங்கப்படும் முதியோர் அடையாள அட்டையையும் பயன்படுத்த முடியும். இதற்கு மேலதிகமாக, மதத்தலைவர்கள் அவர்களுக்கான அடையாள அட்டையை பயன்படுத்தலாம். கடந்த காலத்தில் அடையாள அட்டைகள் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளில் தாமதங்கள் ஏற்பட்டதால், புகைப்படத்துடன் கூடிய ஆவணம் வழங்கப்பட்டது. அந்த ஆவணத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இவை தவிர, தேர்தல்கள் ஆணைக்குழுவால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம்.
இவை எதுவும் இல்லாதவர்களுக்கு, தேர்தல் அலுவலகங்களில் இருந்து தேர்தலுக்காக தற்காலிக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால், நீங்கள் வாக்களிப்பு நிலையங்களில் உங்கள் வாக்கை செலுத்த முடியும்," என்றார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது.
இன்று (06) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறும்.
இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இன்று (06) காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது.
வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
339 உள்ளூராட்சிமன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 8,287 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிக்க சுமார் 3,000 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 65,000 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறுவோர் தொடர்பாக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர் நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும் விசேட கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.