இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் தாய் கட்சியான மக்கள் விடுதலை
முன்னணியின் ஸ்தாபக தலைவர் ரோஹண விஜேவீர, வட பகுதியில் இயங்கிய ஆயுதக்குழுக்களுடன் ஆயுத பரிமாற்றங்கள் உள்ளிட்ட இணக்கப்பாடுகளை மேற்கொண்டிருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவிக்கின்றார்.
நேற்று (ஏப்ரல் 8) பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிபிசி தமிழுடனான நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டில் தற்போது ஆட்சி செய்து வரும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகிய இரண்டுமே அதிகாரத்திற்காகவும், மக்களுக்காகவும் ஆயுதம் ஏந்தி போராடி, ஒரே பாதையில் பயணித்தவர்கள் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திப்பதற்கான முயற்சிகளை, ரோஹண விஜேவீர மேற்கொண்டிருந்தமை குறித்து தான் அறிந்திருந்தாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், வடபகுதியில் இருந்த ஆயுதக்குழுக்களுடன் இணக்கப்பாடுகளை ரோஹண விஜேவீர ஏற்படுத்திக் கொண்டதாகவும், ஆயுத பரிமாற்றங்களை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கேள்வி: இலங்கையை ஆளும் தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணியாக இருந்த சந்தர்ப்பத்தில் ஒரு போராட்ட கலாசாரத்தை நீங்கள் நினைவுப்படுத்தியிருந்தீர்கள். நீங்களும் அதே போராட்டத்தில் இருந்த ஒருவர். அப்படியென்றால், இருவரும் ஒரே பாதையில் பயணித்தவர்களா?.
பதில்: ''ஜே.வி.பி இந்த நாட்டில் உருவாக்கப்படுகின்ற போது, சாதாரண கிராமப்புர இளைஞர்களை உள்ளடக்கி ஒரு இடதுசாரி கொள்கையை கொண்டு வந்தது.
அந்த இடதுசாரி கொள்கையின் நோக்கம் என்னவென்றால், இந்த நாட்டில் இருக்கின்ற மேட்டுக்குடி ஆட்சியாளர்கள் தங்களுடைய நலன்களை மாத்திரம் முன்னெடுக்கின்றார்கள். சாதாரண மக்கள் கைவிடப்படுகின்றார்கள் என்ற அடிப்படையில் அதிகாரத்தை பெறுவதற்காக இடதுசாரி கொள்ளையோடு அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அதேபோன்று, அதனுடைய தலைவர் வடகிழக்கு பகுதிகளுக்கு சென்றிருக்கின்றார்.
அங்கிருந்த ஆயுத தலைவர்களை கூட சந்தித்து ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றார். அந்த அடிப்படையில் நாங்களும் எங்களை நாங்கள் தமிழர்கள் என்று எங்களை ஒதுக்கி, தேசிய ரீதியான நன்மைகளை சிங்கள மக்கள் அனுபவிக்கின்றார்கள். எங்களுக்கு கிடைக்கவில்லை என்று இந்த பகுதியில் வாழ்ந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகள் எல்லோரும் தங்களை ஏமாற்றுகின்றார்கள் என்ற எண்ணப்பாட்டோடு, ஒரு இளைஞர் கூட்டம் தான் ஆயுதங்களை ஏந்துகின்றது.
ஆகவே அந்த ஒற்றுமையைதான் நான் சொன்னேன். அவர்களும் அதிகாரம் வேண்டும் என்று போராடினார்கள் சாதாரண மக்களுக்காக. நாங்களும் அதே பாதையில் போராடியிருக்கின்றோம். அந்த ஒற்றுமை இருக்கின்றது.
ஆகையால், அவர்களுக்கு எங்களை போன்ற அமைப்புக்களோடு, இலகுவாக பணியாற்ற முடியும். இப்போது இருக்கின்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள், பிமல் ரத்நாயக்க அவர்கள் எல்லாம் எங்களோடு பேசி இருக்கின்றார்கள். நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வந்ததற்கு பிறகு இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கின்றார்கள்.
2010ஆம் ஆண்டு கூட பிமல் ரத்நாயக்க அவர்களும் அநுர குமார திஸாநாயக்க அவர்களும் நான் முதலமைச்சராக இருந்த போது இரகசியமாக சந்தித்திருக்கின்றேன். அவர்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசினார்கள்.
அவர்கள் அப்போது நட்பு ரீதியாக பழகியவர்கள். இன்று அரசியல் ரீதியாக, வடப் பகுதியில் 3 எம்.பிக்கள் வந்து விட்டார்கள். அவர்களை சரி செய்ய வேண்டும் என்கின்ற கோணத்தில் பல விடயங்களை பேசினார்கள். அவர்களின் தனிப்பட்ட அரசியலுக்கு போகவில்லை.
கொள்கை ரீதியாக அவர்களுக்கும், எங்களுக்கும் ஒரு இணக்கப்பாட்டோடு பணியாற்றக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதைத் தான் குறிப்பிட்டேன். அதை தவிர நாங்கள் அவர்களை கண்டு அச்சப்படுகின்றோம் அல்லது ஒன்றாக ஆயுதம் ஏந்தினோம் என்ற அடிப்படையில் கூறவில்லை.
இந்த நாட்டில் ஒரு சிங்களவர் தான் அரசியல் தலைவராக வர முடியும். அவர் சிந்திக்க வேண்டும். இந்த நலிவடைந்த மாகாணத்திலே ஒரு போராட்ட இயக்கத்தில் நாடு பிளவுப்படாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு ஒரு இணக்கப்பாட்டு அரசியல் செய்திருக்கின்ற தலைவர்கள் என்ற அடிப்படையில் எங்களுயை கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட எதிர்பார்ப்பு''
கேள்வி: நீங்கள் கூறி விடயத்திலிருந்து மற்றுமொரு கேள்வி. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள். நான் நினைக்கின்றேன். ரோஹண விஜேவீரவைதான் கூறி இருப்பீர்கள். அவர் வடப் பகுதியில் இருந்த ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களோடு சந்தித்திருந்தார். இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தார் என்ற ஒரு கருத்தை கூறியிருந்தீர்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை அவர் சந்தித்திருக்கின்றாரா? அல்லது வேறு யாரும் தலைவர்களை சந்தித்து இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றாரா?
பதில்: நான் விடுதலைப் புலிகளின் தலைவராக நேரடியாக சந்தித்ததாக நான் அறியவில்லை. ஆனால் அவரை சந்திப்பதற்கான முயற்சிகள் வேறு நபர்களோடு தகவல் அனுப்பியதாக நான் அறிந்திருக்கின்றேன்.
அதேபோன்று ஏனைய ஆயுதக்குழு தலைவர்கள் வடப் பகுதியில் இருந்தார்கள். அவர்களோடு பேசி இணக்கப்பாடுகளை செய்திருக்கின்றார்கள். சில நேரங்களிலே இங்கு தேடப்படுகின்ற போது அங்கு சென்று மறைந்துக்கொள்வது. அதேபோன்று, ஆயுத பரிமாற்றங்கள் கூட இடம்பெற்றதாக நான் அறிகின்றேன்.
ஆகையால், இவை எல்லாம் பரஸ்பரம் எல்லோருக்கும் அதிகாரம் தேவை என்கின்ற அடிப்படை உணர்வு. அதை ஏற்றுக்கொண்டார்கள். அந்த உணர்வு இப்போது மாற்றமடைந்திருக்கின்றதா என்றே கேட்க விரும்புகின்றேன்.
கேள்வி: நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில், தேசிய மக்கள் சக்தியுடன் ஒப்பிடும் போது உங்களுக்கும், ஏனைய கட்சிகளுக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. தேசிய மக்கள் சக்தி தென் பகுதியில் எவ்வளவு வரவேற்பை பெற்றதோ, அதே போன்றதொரு வரவேற்பை வடக்கு, கிழக்கிலும் பெற்றிருக்கின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்த கட்சி தனது வளர்ச்சியை காண்பித்திருக்கின்றது. இப்படியான ஒரு சூழலில்தான் உங்களின் புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏன் இனி வர போகின்ற அரசியல் மாற்றங்களை பார்த்து அச்சம் ஏற்பட்டுள்ளதா? புதிய கூட்டணி ஆரம்பிக்க காரணம் அச்சம்தானா?'
பதில்: ''வித்தியாசமான கேள்வி. உண்மையில் புதிய அரசாங்கம், புதிய ஜனாதிபதி. அவர்கள் தென் பகுதியில் வடக்கு கிழக்கில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
முக்கியமாக ஜனாதிபதி அவர்களும், அவருடைய கட்சியும் இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், அரசியல் கட்சிகளிலுள்ளவர்களை கடுமையாக விமர்சித்தவர்கள்.
அவர்களுடைய கட்சியும், அவர்களுடைய கட்டமைப்பையும் தவிர ஏனைய அனைத்தும் பலவீனமானவை என்று தான் அவர்கள் மக்களிடம் கொண்டு சென்றார்கள். அதனூடாக நாட்டிலிருந்து சூழ்நிலை காரணமாக மக்கள் இந்த ஆட்சியை அவரிடம் கையளித்து பார்ப்போம் என்ற எண்ணமும், அலையும் ஏற்பட்டது.
அவர்களுடைய வேலைத்திட்டத்தில் நாங்கள் சந்தேக கண்ணோடு அவர்கள் செய்வார்களா என்ற அச்சத்தோடு பார்த்தோம்.
ஏனென்றால் அவர்கள் வந்த பாதை, அவர்களுக்கு வழங்கப்பட்ட பல வகுப்புக்கள், அவர்கள் சர்வதேச ரீதியாக கொண்டிருக்கின்ற உறவுகள் என்ற பல சந்தேகங்கள் எங்களுக்கு இருக்கதான் செய்கின்றது.
அது வேறு விடயம். இருந்தாலும், அவர்களும் இந்த நாட்டிலே 70 ஆம் ஆண்டு முற்பகுதிகளிலும், 80 ஆம் ஆண்டு பிற்பகுதிகளிலும் கூட சாதாரண இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று சொன்ன ஒரு ஆயுதம் தாங்கிய அரசியலுக்கு வந்த ஒரு இயக்கம். நாங்களும் வடகிழக்கு இணைந்த தாயகம் தேவை, தனிநாடு தேவை, சிங்களவர்களோடு வாழ முடியாது என்று புறப்பட்டு போராடிய இயக்கத்தில் இன்று உயிரோடு இருப்பவர்கள்.
அதைத் தாண்டி அரசியல் அமைப்பிலே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற அதிகார பகிர்விலே 13வது சரத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டு முதல் முறையாக முதலமைச்சராக இருந்து மத்திய அரசாங்கத்திலும் கருணா அம்மான் போன்றவர்கள் அதிகாரத்தை பெற்று, அதிலும் இன நல்லிணக்கம், மீள்குடியேற்றம் என்கின்ற பல விடயங்களை செய்து காட்டி விட்டு வந்திருக்கின்றோம்.
இன்று அந்த அரசியலமைப்பிலே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை அமலாக்காமல், தென் பகுதியில் இருக்கின்ற அரசியல் பிரச்னைகளை மையப்படுத்தி எங்களுடைய பகுதிகளில் அரசியலை கையாளக்கூடிய சூழலை அவர்கள் உருவாக்குவார்களா, அதோடு ஒத்து பார்க்கின்றார்களா என்ற சந்தேகம் இருக்கின்றது.
ஆகவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை போல, எங்களுக்கு தேவை எங்களுடைய பிராந்திய நலன்.
இந்த பிராந்திய நலனை காப்பாற்ற வேண்டிய, திட்டமிட வேண்டிய மக்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களை நீங்கி, உறுதியான ஒரு அதிகாரத்தை பெற்றுக்கொண்டு அதனை பலப்படுத்தும் கட்சியை நம்பிக்கைகரமாக கட்டியெழுப்பு கொண்டு செல்வது.
அதைத்தான் நாங்கள் பார்க்கின்றோம். அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை.
எங்களுடைய மக்களை, எங்களுடைய பிராந்தியத்தில் நாங்கள் அதிகாரத்தை பெற வேண்டும். ஆட்சி செலுத்த வேண்டும். அந்த நன்மை மக்களை சேர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்''
மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பம்
இலங்கையில் தற்போது ஆட்சி அமைத்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தாய் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி விளங்குகின்றது.
இந்த கட்சி 1965ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சிகர இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயுதமேந்திய கிளர்ச்சிபடைகளாக கிளர்ச்சிகளை மேற்கொண்டிருந்தது.
இதன்படி, 1971ஆம் ஆண்டு கிளர்ச்சி மற்றும் 1987 - 1989 கிளர்ச்சி என பாரிய இரண்டு கிளர்ச்சிகளை மக்கள் விடுதலை முன்னணி மேற்கொண்டிருந்தது.
1971ஆம் ஆண்டிற்கு பின்னரான காலத்தில் அப்போதைய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிகளை ஆரம்பித்திருந்ததுடன், அரசாங்கத்தினால் மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது.அஅதனைத் தொடர்ந்து, பாரிய போராட்டங்கள் நாட்டில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீர கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டதுடன், அவர் 1977ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஜனநாயக ரீதியான அரசியலில் மக்கள் விடுதலை முன்னணி பிரவேசித்திருந்தது. 1982 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரோஹண விஜேவீர போட்டியிட்டு கணிசமான அளவு வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, மீண்டும் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக கிளர்ச்சிகளை ஆரம்பித்திருந்தது.
1987 - 1989 கிளர்ச்சி காரணமாக நாட்டில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டதுடன், அந்த கிளர்ச்சிகளிலும் மக்கள் விடுதலை முன்னணி தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், ரோஹண வீஜேவீர கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை பின்னர் உறுதியாகியிருந்தது.
இவ்வாறான பின்னணியில், கிளர்ச்சிகளை கைவிட்ட மக்கள் விடுதலை முன்னணி, 1994ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனநாயக வழிக்கு பிரவேசித்தது.
இந்த நிலையில், ஆட்சியிலிருந்து சில அரசாங்கங்களுடன் இணைந்து அதிகாரத்தை பெற்றுக்கொண்டதுடன், பின்னர் அந்த கட்சிகளிலிருந்தும் விலகியிருந்தது.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் 2004ம் ஆண்டு கைக்கோர்த்த மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது.
அதன்பின்னர் மக்கள் விடுதலை முன்னணியாக பல தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும், குறிப்பிடத்தக்களவு வாக்கு வங்கியை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இந்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணி 2019ம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை ஆரம்பித்து, திசைகாட்டி சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது.
ஊழல், மோசடிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணி, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு இதுவரை ஆட்சி பீடம் ஏறிய ஆட்சியாளர்களே காரணம் என்ற வகையிலான பரப்புரைகளை மேற்கொண்டு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி இன்று ஆட்சியை செய்து வருகின்றது.
இவ்வாறான பின்னணியிலேயே, ரோஹண வீஜேவீர கிளர்ச்சிகளில் ஈடுபட்ட தருணங்களில், ஆயுத பரிமாற்றம், தலைமறைவாகி வாழ்வதற்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு வடக்கில் இயங்கிய தமிழ் ஆயுதக்குழுக்களில் உதவியை பெற்றுக்கொண்டதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதியான பிள்ளையான், பிபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.
இலங்கையின் வடக்கில் இயங்கிய ஆயுதக்குழுக்கள்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் வடக்கில் ஆயுதம் ஏந்திய போராட்டங்களை முன்னெடுத்திருந்தன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் வடக்கில் இயங்கியிருந்தன.
சிவநேசத்துரை சந்திரகாந்தனின் இந்த பேட்டி குறித்து ஆளும் ஜேவிபி கட்சியின் கருத்துகளை பிபிசி தமிழ் கேட்டிருக்கிறது. இது குறித்த மின்னஞ்சலுக்கு பதில் கிடைத்ததும் அதுவும் வெளியிடப்படும்.
- பிபிசி தமிழ்