உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் இள வயது வேட்பாளர்களின் வயதை உறுதிப்படுத்தும்
பிறப்புச் சான்றிதழ் ஆவணம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை காலை மேல் முறையீட்டு நீதிமன்றமும் மாலையில் உயர் நீதிமன்றமும் ஒன்றுக்கு ஒன்று முரணான - மாறுபாடான - உத்தரவை வழங்கியிருக்கின்றமை தெரிந்ததே.
இந்தப் பின்புலத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையம் மேன்முறையீடு செய்யும் என்று கடந்த குறிப்பிட்டிருந்தோம்.
ஆயினும் நேற்று செவ்வாய்க்கிழமை கடந்தும் இந்த விடயம் நடக்கவில்லை. மேன்முறை யீட்டு நீதிமன்றத் தீர்ப்பின் பிரதிகளை பெற்றுக்கொள்ளுதல், அவை தொடர்பில் சட்டமா அதிபர் திணக்கணத்தில் உரிய மேன்முறையீட்டு ஆவணங்களைத் தயாரித்தல் போன்றவற்றில் தொடர் தாமதம் நிலவிய காரணத்தினால் நேற்று வரை மேன்முறையீடு சாத்தியமாகவில்லை என்று தெரிகின்றது.
பெரும்பாலும் தேர்தல் ஆணையம் சார்பில் சட்டமா அதிபர் தமது மேன்முறை யீட்டை இன்று சமர்ப்பிப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், அதை ஒட்டி அப்படியே இந்த மேன்முறையீடு தொடர்பில் விடயங்களை உயர் நீதிமன்றம் கையாள வேண்டி இருக்கும்.
அதனால் இன்றே இந்த மேன்முறையீட்டை காலையில் நேரத்தோடு தாக்கல் செய்து, மாலைக்கு இடையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பெற வாய்ப்பு இருப்பதாக சில சட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பல வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான தேர்தல் ஆட்சேபனை வழக்குகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாளை எடுக்கப்பட இருக்கையில் இன்று உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் மேன்முறையீட்டை பரிசீலனைக்கு ஏற்று உத்தரவு ஒன்று வழங்குமானால், அடுத்து வரும் நாள்களில் ஏற்படக்கூடிய தேவையற்ற சட்ட இழுபறிகளைத் தவிர்க்கலாம் என்று அந்த சட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் போன்றவற்றைக் குறுகிய காலத்தில் நடத்திக் களைத்துப் போய் இருக்கும் தேர்தல் ஆணையம், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒட்டிப் பல நூற்றுக் கணக்கில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் வகை தொகை இன்றித் தாக்கலாகி சிக்கெடுப்பதால் இப்போது தடுமாறிப் போய் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுகளினால் இந்த உள்ளூராட்சி தேர்தலைக் கட்டம் கட்டமாக நடத்தி, அதனால் காலம் மேலும் இழுபடும் சூழல் வந்தால், இனி வரக்கூடிய மாகாணசபைத் தேர்தலும் மேலும் பல காலம் தாமதிக்க வாய்ப்பு உண்டு.
-முரசு