15 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன்
என்று கூறப்படும் பாடசாலை மாணவன், மேலும் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஏழு பேரை, ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர், சிறுமியுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்து அளித்த புகாரின் அடிப்படையில், பொலிஸார் இந்த சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
கூட்டு வன்புணர்வுக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவி, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டியூஷன் வகுப்புக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டே, மேற்படி மாணவி தனது காதலன் என்று கூறிக்கொண்ட மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.
அப்போது, சந்தேகநபரான காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று, அங்கு அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன்படி, பாதிக்கப்பட்ட சிறுமி, சம்பவ தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள், வேறு மூன்று வீடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளதென்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அப் பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.
அவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் என்றும் ஏனைய இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள், மேற்படி பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஏழு சந்தேகநபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.