மியான்மரில் 3 முறை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை
180ஐ தாண்டியது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
வரலாற்றிலேயே இல்லாத வகையில் மோசமான நிலநடுக்கத்தை மியான்மர் நாடு சந்தித்துள்ளது. சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற தாய்லாந்தையும் நிலநடுக்கம் உலுக்கி எடுத்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடான மியான்மரை வெள்ளிக்கிழமை பகல் 12.50 மணிக்கு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உலுக்கின. 7.7 மற்றும் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மன்டலேயில் ரிக்டரில் 7.7 அளவு பதிவான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்தன.
144 பேர் இறந்துவிட்டதாகவும் 730 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் மியான்மர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கை பல ஆயிரங்களாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.காயம் அடைந்தவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுவதாக மியானமரின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் நெடுஞ்சாலைகள் பாலங்கள் சேதம் அடைந்துள்ளன.உணவுக்கும் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.