ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளன.
குறித்த கட்சிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (13) கைச்சாத்திடப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தலைமையிலான மனிதநேய மக்கள் கூட்டணியில் பதிவு செய்யப்பட்ட 03 அரசியல் கட்சிகளும் 27 சிவில் அமைப்புகளும் கைச்சாத்திட்டன.
அரசியலமைப்பில் காணப்படும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை, அவ்வாறே அமுல்படுத்த வேண்டும் எனவும் மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தான் முன்வைத்ததாக பிரபா கணேசன் கூறியுள்ளார்.
மேலும் கொழும்பில் வாழும் தமிழர்களுக்கான வீட்டு உரிமை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன் ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்குவதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.