கொரோனா தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டவர்கள் மற்றும் பரப்பியவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் சட்டத்தை மீறியமை தொடர்பில் எச்சரிக்கை மாத்திரம் செய்து, பொலிஸார் சில குழுக்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் செயற்பட்டமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தவறான தகவல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் நபர்கள் கைதுசெய்யப்படும் அதேவேளை அரச அதிகாரியை விமர்சித்தமைக்கு எதிராக பொலிஸார் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கை கருத்துச் சுதந்திரத்தை பாதித்துள்ளதாக பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது..

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு, ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக்கா உடுகம எழுதியுள்ள கடிதத்தில், அவசரகால நிலைமையிலும் கூட கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திலுள்ள ஏனைய உரிமைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் சட்ட வரைமுறைகளுக்குள் உட்பட்டதாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை பதிவிட்ட குற்றச்சாட்டுக்கு இலக்கான நபர்களை கைதுசெய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சட்டத்தின் சரத்துக்கள் குறித்தும் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளின் பிரகாரம், குற்றவியல் சட்டக் கோவை, கணணி குற்றச்சட்டம், பொலிஸ் ஒழுக்கச் சட்டம், தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சட்டம் ஆகியவற்றின் கீழேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சட்டங்களை பயன்படுத்துவதன் சட்ட அடிப்படை கேள்விக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம்

தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் பிரகாரம், கட்டளைச் சட்டத்தை மீறினால் மாத்திரமே அதனைப் பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும் சட்டத்தில் உள்ள எந்த ஒழுங்குகளை மீறிய குற்றச்சாட்டில் பல்வேறு நபர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் அல்லது அந்த சட்டத்தின் கீழ் அதிகாரிகளின் கடமைகளுக்கு எவ்வாறு அவர்கள் இடையூறு விளைவித்தார்கள் என்பது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று சட்டத்தின் 11 ஆம் சரத்திற்கு அமைய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் அனர்த்த நிலை அறிவிக்கப்படாத நிலையில், அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் 24 ஆம் பிரிவை செயற்படுத்த முடியுமா என்பது கேள்விக்குரியது எனவும் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அனைவரினதும் கைதுகளுக்கான சட்ட அடிப்படைகள் பொலிஸாரின் பி அறிக்கையில் குறிப்பிட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், தவறான தகவல்கள் பொதுஒழுங்கு மற்றும் பொதுச்சுகாதாரத்தில் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்துமாயின், அதனை தடுக்கும் வகையில் சட்ட அமுலாக்க அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைக்கு சரியான சட்டபூர்வ அடிப்படை இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அரச அதிகாரிகளை விமர்சிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவினால் ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பட்ட எச்சரிக்கை கடிதம் குறித்து கரிசனையை வெளியிட்டுள்ள கலாநிதி தீபிக்கா உடுகம, இது மக்களின் கருத்து சுதந்திரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

அரசாங்க அதிகாரிகளையும் ஏனையோரையும் எந்தவொரு கொள்கைளையும் விமர்சிக்கும் அல்லது கருத்துக் கூறும் உரிமையானது, அடிப்படை அத்திவாரம் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரபட்சம்

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசன சட்டத்தைப் பயன்படுத்தி, தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பிலும் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு விமர்சனம் வெளியிட்டுள்ளது.

பாரபட்சம் இன்றி சட்டத்தை பயன்படுத்துவதன் முக்கியத்துவதை வலியுறுத்தியுள்ள ஆணைக்குழு, அல்லாவிடின் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நோக்கத்திற்கு எதிராக பல்வேறு குழுக்கள் அதனை எதிர்ப்பு ஆயுதமாக பயன்படுத்த முயற்சிக்கும் என கூறியுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கைதுகளை அவதானிக்கும் போது, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசன சட்டத்தின் விதிகள், பாரபட்சமின்றி பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதில் திருப்தி அடைய முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக்கா உடுகம, பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா அனர்த்தத்துடன் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதன் மூலம் கருத்துச் சுதந்திரம், சிறுபான்மை மற்றும் மத உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும் ஸ்ரீலங்காவின் ஊடக ஸ்தாபனங்களும் வர்த்தக தொழிற்சங்கங்களும் சிவில் சமூகத்தினரும் விமர்சனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி