தெமட்டகொடையில் வர்த்தக

நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த இளைஞரைக் கடத்தி அநியாயமாக தடுத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான நீண்ட விசாரணைகளின் பின்னர்  ஹிருணிகா பிரேமச்சந்திரவை குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தீர்ப்பளித்துள்ளார்.

கடத்தல் வழக்கு தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த குற்றச்சாட்டுக்கு (ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும்) 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்டனைக்கு முன்னர் மனுதாரர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டார, பிரதிவாதியின் ஆதரவாளர்கள் எட்டு பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை நினைவு கூர்ந்தார்.

பிரதிவாதி செய்த குற்றங்களின் தன்மையைப் பொறுத்து, பிரதிவாதிக்கு 69 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கும் திறன் நீதிமன்றத்துக்கு உண்டு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதிவாதி தனது பாராளுமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி வர்த்தக நிறுவனம் ஒன்றில்  பணிபுரிந்த ஒருவரை கடத்திச் சென்று குடும்ப தகராறுகளைத் தீர்ப்பதற்கு பணித்துள்ளார்.

இது மிகவும் பாரதூரமான விடயம் எனவும் இது குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட வேண்டிய குற்றம் எனவும் தண்டனையை இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக மாற்றுவது பொருத்தமற்றது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

IMG 20240628 173047 800 x 533 pixel

பிரதிவாதி  ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மத்தேகொட, நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்து, பிரதிவாதிக்கு மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயதுடைய மூன்று சிறுவர்கள் இருப்பதாகவும், அவர் சிறையில் அடைக்கப்பட்டால் அந்தப் பிள்ளைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன் பிரகாரம், பிரதிவாதிக்கு சிறைத்தண்டனை வழங்காமல், அவருக்கு தண்டனை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.

முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி இந்தத் தீர்ப்பை அறிவித்த நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதி மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மத்தேகொட நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

அதன்படி தண்டனை விதிக்கப்பட்ட திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு டிஃபென்டரில் கடத்திச் சென்று தடுத்து வைத்து  காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி