ஐந்து ரயில் நிலையங்களில் இரண்டின் 80 சாரதிகள்
பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதால், கோட்டை, மருதானை மற்றும் ஏனைய ரயில் நிலையங்களில் பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இன்ஜின் சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் (10) தொடர்கிறது.
லோகோமோட்டோ இயக்க பொறியாளர்கள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (7) ரயில் சாரதிகளின் இரண்டாம் தர பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணாமை போன்ற காரணங்களை முன்வைத் த ரயில்வே பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலை நிறுத்தத்தை தொடங்கியது.
இதன் காரணமாக சில ரயில் நிலையங்கள் வெறிச்சோடி, காணப்பட்டதால் பயணிகள் பஸ்களில் பயணம் செய்தனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 43 ரயில் பயணங்களும், சனிக்கிழமை காலை முதல் மாலை 5.30 மணி வரை 76 பயணங்களும், நேற்று பிற்பகல் (9) வரை 35 ரயில் பயணங்களும் இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொரட்டுவை, கல்கிஸ்ஸ, சிலாபம் நீர்கொழும்பு, மீரிகம, அம்பேபுஸ்ஸ, ரம்புக்கன மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறுகிறது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று (10) தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும், அங்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார்.
இதேவேளை, அதிகாரிகளிடமிருந்து நேற்றைய தினம் எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை எனவும், அதன் பிரகாரம் எஞ்சிய மூன்று நிலையங்களும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் லோகோமோட்டோ பொறியாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனநாயக்க தெரிவித்தார்.