பொலிஸ் ஊரடங்குச்சட்டம்  இன்று (09) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையில் குறைந்தளவான மக்களே வருகை தந்திருந்தனர்.

நண்பகலுக்கு பிறகே தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதால் அதன் பின்னரே பெருமளவானவர்கள் நகரங்களை நோக்கி வாகனங்களும், நடைபயணமாகவும் வந்தனர்.

இன்று மாலை  4 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிவரை அமுலில் இருப்பதாலும், இடையில் தமிழ், சிங்கள புத்தாண்டு மலர்வதாலும் மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களை கொள்வனவு செய்தனர்.

வேலை நாட்கள் குறைவு என்பதால் தோட்டத் தொழிலாளர்களிடம் போதுமானளவு பணம் இருக்கவில்லை. சிலர் நகைகளை அடகுவைத்து - அதன்மூலம் கிடைத்த பணத்திலே பொருட்களை வாங்கினர்.

ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ச.தொ.காவில் தமக்கு தேவையானளவு பொருட்களை கொள்வனவு செய்யமுடியாமல் இருந்ததாக நுகர்வோர் தெரிவித்தனர்.

தலவாக்கலை, கொட்டகலை, பொகவந்தலாவ  ஆகிய நகரங்களில் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை காணக்கூடியதாக இருந்தது. எனினும், ஒரு சிலர் எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றுவதாக தெரியவில்லை.

அதேவேளை, ஒரு சில வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையைவிடவும் கூடுதல் தொகைக்கு பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. நகரப்பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், ரோந்து நடவடிக்கையிலும் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி