ரஷ்ய இராணுவத்தில் சேவையாற்றுவதற்காக இலங்கையர்களை
அனுப்பியதாகக் கூறப்படும் நுகேகொட பிரதேசத்தில் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் அதன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரின் வாக்குமூலங்களை பதிவு செய்ததன் பின்னர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதேவேளை, சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசாவில் ரஷ்ய இராணுவத்தில் சிவில் சேவைக்காக இலங்கையர் ஒருவரிடமிருந்து தலா 15 இலட்சம் ரூபா அறவீடு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், அந்த இலங்கையர்கள் அந்நாட்டில் ரஷ்ய-உக்ரைன் போரின் போர் முனைக்கு செல்ல நேரிட்டதாகவும் வேலைவாய்ப்பு பணியகம் கூறுகிறது.
இந்த முகவர் நிறுவனத்தினால் ஆட்கற் கடத்தப்பட்டமை தொடர்பில் பணியகத்துக்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.