இந்நாட்களில், புரட்சிகரமான செய்திகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எப்படியும், தேர்தல் சூடு அதிகரிக்க அதிகரிக்க, அந்த

நிலைதான் காணப்படும். அந்த அலையில், லங்கா ஈ நியூஸ் இணையத்தளமும் இணைந்துள்ளது. “அரசியல் புரட்சி!:

“ஐக்கிய தேசிய கட்சிக்கு தப்பி ஓடிய மொட்டுக் கட்சியின் அமைச்சர்கள்: பெயர்ப் பட்டியல் இதோ!" என்ற தலைப்பில், அந்த இணையத்தளத்தில் அரசியல் செய்தியொன்று எழுதப்பட்டுள்ளது.

அரசியல் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் மொட்டுக் கட்சியின் அமைச்சர்கள் 13 பேர், ராஜபக்ஷர்களை கைவிட்டு விட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியில் இணையவுள்ளனர்” என்று, அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், பிரதமர் தினேஷ் குணவர்தனமும் அடங்குகிறார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு மொட்டுக் கட்சியை கைவிட்டு விட்டு ரணிலுடன் இணையவுள்ள அமைச்சர்களின் பெயர்ப் பட்டியலையும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அழுத்தமகே, ஷெஹான் சேமசிங்க, ரமேஷ் பத்திரன, காஞ்சனா விஜயசேகர, பிரமித்த தென்னகோன், அலி சப்ரி, எஸ்பீ திசாநாயக்க, பவித்ரா வன்னியாரச்சி, பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க ஆகியோர், பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை, மொட்டுக் கட்சியின் ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், ஐக்கிய தேசிய கூட்டணியில் இணையத் தயாராக உள்ளனராம். இதன்மூலம், அரசாங்கத்தின் அதிகாரச் சமநிலை மாறக்கூடிய அதேவேளை, இந்தக் குழுவில், கடும் ராஜபக்ஷவாதியான பிரேம்நாத் தொழவத்தவும் அடங்குகிறாராம்.

தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகராக பணியாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, 2024 ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்போவது, ராஜபக்ஷ முகாமுக்கு பாரிய தோல்வியாகவே அமைகிறது. ராஜபக்ஷ குடும்பத்தின் நீண்டகால நண்பரான பிரதமர் தினேஷ் குணவர்தனவும் ஐக்கிய தேசிய கூட்டணியில் இணைவது, ராஜபக்ஷ குடும்பத்துக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.

இந்தக் கதைகளில் உண்மை பொய் எதுவாயினும், மொட்டு கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களை ஒரே பிடியில் வைத்துக்கொள்ள, கட்சியின் நிறுவுனரான பெசில் ராஜபக்ஷ கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த வார இறுதியில், கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த மொட்டுக் கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி விக்ரமசிங்க சந்தித்திருந்தார்.

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிந்திருந்த உறுப்பினர்கள் சிலரும், அதில் அடங்கியிருந்தனர். வேடிக்கை என்னவென்றால், அவர்கள் அனைவரும் அன்றைய தினம், ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்திருக்கின்றனர். இப்படிப் பார்க்கபோனால், மொட்டுக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவுக்கு, தமது கட்சியிலிருந்து அங்கும் இங்கும் தாவப்போகின்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திக்கொள்வதே பெரும் சவாலாகத்தான் அமையப் போகிறது.

பெசில் ராஜபக்ஷ, தமது கட்சியினரை சமாளிக்க முயற்சிக்கும் வேளையில், நாமல் ராஜபக்ஷ வேறொரு விளையாட்டுக்குள் இறங்கி இருக்கிறார். மொட்டுக் கட்சியை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்புவதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அதன் முதற்கட்டமாக, வீட்டுக்கு வீடு சென்று கட்சி ஆதரவாளர்களை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் எந்த ஒரு தேர்தல்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில், மீண்டும் தமது கட்சியை பலமிக்கதாக மாற்றுவதே அவரது நோக்கம் என்றும் நாமல் குறிப்பிட்டிருக்கிறார்.

மொட்டுக் கட்சியை இந்நாட்டிலுள்ள அதிசக்தி வாய்ந்த கட்சியாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து அர்ப்பணிப்புகளையும் முன்னெடுக்க, தான் தயாராக உள்ளதாகவும் நாமல் குறிப்பிட்டிருக்கிறார். நாமல் தரப்பு என்னதான் செய்தாலும், மொட்டு கட்சி பிளவுபடப் போகும் காலம் தொலைவில் இல்லை. பார்க்கப் போனால் ஈ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

எவ்வாறாயினும், பெசில்வாதியான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, மொட்டுக் கட்சியின் ஆதரவின்றி எவராலும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார். “மொட்டுக் கட்சியின் ஆதரவின்றி எவராலும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் விடுதலை முன்னணிக்கு மூன்று லட்சம் வாக்குகளை உள்ளன. அவர்கள் 71 லட்சம் வாக்குகளை பெறவேண்டுமாயின், இன்னும் 68 லட்சம் வாக்குகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

அதாவது அவர்களிடம் இருக்கும் வாக்கு வீதத்தை ஆயிரத்து எழுநூற்று அறுபத்து நான்கு சதவீதத்தினால் அதிகரித்துக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இரண்டு 2 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகளையே பெற்றார். 71 லட்சம் வாக்குகளைப் பெற, அவரும் 69 லட்சம் வாக்குகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். பிரேமதாசவின் முழு குழுவும் இணைந்து, 58 லட்சம் வாக்குகளையே பெற்றது.

அங்கு சஜித்துக்கு மாத்திரம் 12 லட்சம் வாக்குகள்தான் இருந்தன. அதனால், அவர் இன்னும் 56 லட்சம் வாக்குகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதனால், இலக்கங்களால் மொட்டுக் கட்சியை எவராலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. எமது ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் யாரும் அவசரப்பட தேவையில்லை. எங்களிடம் வேண்டியளவு வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

சரியான நேரத்தில் தகுதியானவரை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்” என்று, மொட்டு கட்சியின் எம்பியான பேராசிரியர் ரஞ்சித் பண்டார கூறியுள்ளார். இந்த கதையைக் கேட்ட சில விமர்சகர்கள், இந்நாட்டின் பிரச்சனைகள் மற்றும் அரகலய போராட்டத்துடன், இந்தத் தரவுகள் எப்படி மாறி இருக்கின்றன என்பது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. அது பற்றி சிந்தித்திருந்தால், பண்டார போன்றவர்கள் வாய்ப்பேச்சு காட்ட மாட்டார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி