வரலாற்றில் இதுவரை நடந்த தேர்தல்களைவிட, 2024 ஜனாதிபதித் தேர்தல் முற்றாக மாறுபட்டதாக அமையுமென்று, நாம் தொடர்ந்து

வலியுறுத்தி வந்தோம். இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவில்லை.

ஆனால், இலங்கை தேர்தல்கள் வரலாற்றில், மிக முக்கிய அடித்தளத்தை உருவாக்கும் காலம் கனிந்துள்ளது. தேசிய தேர்தல் ஒன்றில் போட்டியிடும் இரு வேறு கட்சிகளில் இருந்து களமிறங்கவுள்ள இரண்டு தலைவர்கள், ஒரே மேடையில் தங்களுடைய கொள்கைகளை வெளிப்படுத்தி, தங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நாட்டைக் கட்டியெழுப்பும் முறை தொடர்பில், நேரடி விவாதத்துக்கு வந்து வெளிப்படுத்த இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.

ஐமச உடனான விவாதத்துக்கு தயார் என்று, திசைக்காட்டி அறிவித்திருந்த நிலையில், ஐமச தலைவர் சஜித் பிரேமதாசவும், அதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார். பொருளாதாரம் பற்றியும் சமூகம், அரசியல் மற்றும் சர்வதேச விடயங்கள் உள்ளிட்ட துறைகள் சார்ந்த தலைப்புகளின் கீழ் விவாதத்தை நடத்தத் தயார் என்று, சஜித் அறிவித்திருக்கிறார்.

“நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பான விவாதம் ஒன்று வேண்டுமென சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. அவ்வாறான விவாதம் ஒன்று தேவை என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அதனால், அவ்வாறான விவாதம் ஒன்று நடத்தப்படுவது ஜனநாயக சமூகத்தின் உயர்ந்த குணாதிசயமாகும். எனவே, நான் எந்தவொரு விவாதத்துக்கும் தயார்” என்று, சஜித் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறு தெரிவித்திருக்கும் சஜித் பிரேமதாச, தன்னுடன் போட்டியிடவும் நாட்டுக்காக சேவை செய்யவும் முன்வருமாறு, அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்திருக்கிறார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பாடசாலை ஒன்றுக்கு ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சஜித், அந்தச் சவாலை விடுத்திருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான விவாதம் ஒன்றுக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுத்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் சுனில் ஹந்துன்நெத்தி, நாட்டில் முதலில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடக்கப் போவதாகவும் அதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இடையிலேயே அந்த விவாதம் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும, இது தொடர்பான அறிவிப்பு அக்கட்சியில் இருந்து எழுத்துமூலம் கிடைக்க வேண்டுமென்றும் சுனில் ஹந்துன்நெத்தி நிபந்தனை விதித்திருக்கிறார். அது எவ்வாறாயினும், சஜித்துடன் நிபந்தனையற்ற விவாதத்துக்கு தான் தயார் என்று, அனுரகுமார தற்போது அறிவித்திருக்கிறார்.

இரு கட்சித் தலைவர்களுக்கு இடையில் நடத்தப்படவுள்ள இந்த விவாதத்திற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள, பல ஊடக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த விவாதத்தை நடத்தவும் அதனை நேரடி ஒளிபரப்பு செய்யவும், லீடர் டிவி தயாராக இருக்கிறது.

பிரபல அரசியல் விமர்சகரான சிந்தன தர்மதாச, “இதுதான் விவாதம், இதை பார்த்துவிட்டு நான் செத்தாலும் பரவாயில்லை!” என்று, போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார். உண்மையில், இது ஒரு முக்கியமான விவாதமாகவே பார்க்கப்படுகிறது.

காரணம், ஐமசவைப் போன்றே, ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும், கடந்த காலத்தில் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொண்டு செயல்படுகின்றன என்று, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி வருகின்றது. அதனால், அதன் உண்மை நிலையை வெளிக்கொண்டுவர இந்த விவாதம் நல்ல ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

அதேபோன்று, தங்களுடைய கொள்கைகள், ஏனையவர்களின் கொள்கைகளுடன் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் இது எடுத்துக்காட்ட உதவுகிறது. அதேவேளை, அவ்விருவரின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறுவதற்கான வாய்ப்பாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி