மத தினமாக இருந்த ஈஸ்டர், இப்போது அரசியல் உரையாடலின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு 31 என்றாலும், இந்த

வாரம் அரசியல் களத்தை சூடுபிடித்த ஈஸ்டர் பற்றிய கதையுடன் தொடங்கியது. ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான சமீபத்திய தகவல்கள் கிடைத்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கூறிய கதையில், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிக்கிக்கொண்டன. “முன்னாள் ஜனாதிபதி அவர்களே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மை உங்களுக்குத் தெரிந்தால் உடனடியாக வெளிப்படுத்துங்கள்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதில், தற்போதைய ஜனாதிபதியும் அக்கறை காட்டவில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். வெளிப்படையான மற்றும் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்று சஜித் வலியுறுத்துகிறார். இதற்காக பொது ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு பதிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும், அதற்காக, வெளிப்படையானதும் நேர்மையானதும், துல்லியமானதுமான விசாரணையே காலத்தின் தேவை எனவும் எதிர்கட்சி தலைவர் கூறுகிறார்.

தற்போதைய ஜனாதிபதிகூட, ஸ்கொட்லண்ட்யாட் பொலிஸாரை அழைத்து விசாரணை நடத்துவதாகக் கூறினாலும், ஸ்கொட்லண்ட்யாட் பக்கம்கூட செல்லவில்லை என்றும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை என்றும், ஈஸ்டர் தாக்குதல் குற்றத்துக்கான உண்மை, எதற்காக மறைக்கப்படுகிறது என்றும் பிரச்சினை உள்ளது என்றும், இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த பெரும் துயரம் காரணமாக, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.

சக்வல நட்புறவு வகுப்பறைகள் திட்டத்தின் 133-வது கட்டத்தின் கீழ், ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, கிவுல கனிஷ்ட வித்தியாலயத்திற்கு, 10 லட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்தக் கதைகள் எதுவாயினும், அன்றைய தினம் சிறிசேன பேசிய சர்ச்சைக்குரிய பேச்சால், கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகளும் சிறிசேனவை ஓரங்கட்டும் நிலைக்கு வந்துவிட்டனர். மேற்கண்டவாறான வொய்ஸ்கட்களைக் கொடுத்து, சஜித்தும் அதே வேலையைத்தான் செய்கிறார். சிறிசேனவுடன் கூட்டணி அமைக்க முடியாது என்று, லன்சா, ஷம்பிக்க தரப்புகளும் சொல்லத் தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. கத்தோலிக்க வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக, சிறிசேனவை பழிக்கடவாக்கவும் அனைவரும் தயாராக இருக்கின்றனர். இதற்கிடையில், சுதந்திரக் கட்சியிலிருந்து சிறிசேனவை விரட்டியடித்துவிட்டு, அக்கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றவும் சிலர் முயற்சித்து வருகின்றனர். சஜித், லன்சா, ஷம்பிக்க ஆகியோர் சிறிசேனவை தட்டிக்கழிக்கும் போது, ரணில் புதிய ஆட்டமொன்றை ஆடுகிறார்.

சிறிசேனவின் ஊடகப் பேச்சு வெளியான நாள் முதல், பொலிஸாரும் சட்டமா அதிபர் திணைக்களமும், இறங்கி வேலை செய்கின்றன. CID-க்கு சென்று சிறிசேன வாக்குமூலம் அளித்துவிட்டு வந்ததும், CID அதிகாரிகள், சிறிசேனவின் வீட்டுக்கும் சென்றுள்ளனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த செக்கியுரிட்டி கெமராக்களைப் பரிசோதித்துள்ளனர். டேட்டா ஷிப்ஸ்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். அதாவது, கடந்த சில வாரங்களில், சிறிசேனவின் வீட்டுக்கு வந்து சென்ற அனைவர் பற்றியும் தேடத் தொடங்கியுள்ளனர். சிலரிடம் விசாரணைகளை நடத்தவும் தயாராகி வருகின்றனர்.

பொலிஸ் தகவல்களின் பிரகாரம், அவ்வாறானதொரு விசாரரைணை சும்மா தொடங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தனது வீட்டுக்கு வந்த ஒருவர்தான், அந்த ஈஸ்டர் தாக்குதல் கதையைத் தனக்குச் சொன்னதாக, CID-க்கு அளித்த வாக்குமூலத்தில் சிறிசேன தெரிவித்திருக்கிறார். அப்படி வந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தனக்குத் தெரியாதென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதனால், அந்த நபர் யாரென்பது பற்றித்தான், பொலிஸார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், சிறிசேனவை நீதிமன்றத்துக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. சிறசேனவை பயமுறுத்தி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் காலடிக்கு கொண்டுவருவதற்காகவே இவை அனைத்தையும் செய்கின்றார்கள் என, சிலர் கூறுகின்றனர். அந்தக் கதைகளின் உண்மை எதுவாயினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதை ஒருபுறம் வைத்துவிட்டு, அரசியல் ஆட்டத்துக்கான காய்நகர்த்தல்கள்தான் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், சிறிசேனவின் அப்பக் கதையும், மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது. கொழும்பு நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க நியமிக்கப்பட்டமைக்கான ஒன்றுகூடலொன்று, 28-ம் திகதி இரவு, கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

அந்த ஒன்றுகூடலுக்கு, நீதிபதிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்தரணிகள் கலந்துகொண்டுள்ளனர். அரசியல்வாதிகளான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஷம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். சிறிசேன CID-க்கு சென்ற பின்னர் நடக்கும் முதல் நிகழ்வாகத்தான் இது அமைந்திருந்தது.

இந்த ஒன்றுகூடலுக்கு இடையில் நடந்த விருந்துபசாரத்தில், அப்பமும் பறிமாறப்பட்டுள்ளது. சிறிசேனவுக்கு அப்பம் பறிமாறப்பட்டபோது, “அப்பம் சாப்பிட்டுவிட்டுதான் அடுத்த பக்கத்துக்குத் தாவினார்” என்று, அங்கிருந்த ஒருவர் சொன்னபோது, அனைவரும் சிரித்துள்ளனர். “இவர், நள்ளிரவு 12 மணிக்கு, எனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தார். மஹிந்த கேட்டாராம், பொது வேட்பாளராக ரணில்தானே வரப்போகிறார் என்று. மைத்திரியும் ஓம் என்றார்” என, ராஜித்த எம்பி அப்போது கூறியுள்ளார்.

அப்பத்துக்கு நீண்ட வரலாறொன்று உள்ளதென்று, அப்போது அங்கு பேசப்பட்டுள்ளது. இந்த விருந்துபசாரத்துக்குப் பின், சிறிசேனதான் முதலில் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்கிடையில், எந்தப் பிரச்சினையிலிருந்து தப்பினாலும், ஈஸ்டர் தாக்குதல் பிரச்சினையிலிருந்து மட்டும், சிறிசேனவுக்கு எப்போதும் விமோச்சனம் இல்லையென்றுதான், பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி