தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பில் இருந்த எட்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் எப்போது?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள், ஜூலை 2021இல் தொடங்கலாம் என்று ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜூலை 24 தொடங்கி நடக்கவிருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று தொடங்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் என்ன நிலைமை?

மத்திய கிழக்கு நாடுகளிலேயே அதிகம் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நாடான இரானில் மேலும் 123 பேர் இறந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,640 ஆகியுள்ளது.

இதனிடையே ஜெட்டா மாகாணத்தில் இருந்து வெளியேறவும், அந்த மாகாணத்திற்குள் நுழையவும் சௌதி அரேபியா தடை விதித்துள்ளது. ரியாத், மெக்கா, மதீனா ஆகிய நகரங்களில் கடந்த வாரம் முதல் உள் நுழையவும், வெளியேறவும் தடை உள்ளது.

பாதுகாப்பு துறையினரின் பங்களிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்தியப் பிரதமரின் நிவாரண நிதிக்கு தங்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்க இந்திய புலனாய்வு நிறுவனமாக சிபிஐ-இன் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழங்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் கோவிட்-19 தொற்று ஒழிப்புக்காக திரட்டப்படும் நிதி சுமார் 500 கோடி வரை வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எந்த விலங்கிடமிருந்து பரவியது?

உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள பிபிசியின் ஹெலன் பிரிக்ஸ் விஞ்ஞானிகளிடம் சென்றார்.

சீனா தற்போது மீண்டும் வன விலங்கு சந்தைகளை மூடி விட்டது. ஆனால் இது நிரந்தரமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

விரிவாக படிக்க: கொரோனா வைரஸ் எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு

கொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு

பிரிட்டனில் முடக்கநிலை

பிரிட்டனில் நிலைமை மேலும் மோசமாகும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ள நிலையில் கணிசமான காலத்துக்கு முடக்க நிலைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

வரும் வாரங்களில் சமூக விலகலை கடைபிடிப்பது மிகவும் அவசியம் என்று பிரிட்டனின் அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் 'கணிசமான காலத்துக்கு கடுமையான நடவடிக்கைகள் இருக்கும்' என்று அவர் கூறியிருந்தாலும், அது எவ்வளவு காலம் என்று குறிப்பிடவில்லை.

ஜூன் மாதம் வரை இது நீடிக்கலாம் என்று மூத்த அரசு ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த கைக்குழந்தை

அமெரிக்காவில் முதன்முறையாக பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.

அக்குழந்தை சிகாகோவில் உயிரிழந்ததாக இல்லினோயிஸின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக சீனாவில் கொரோனா தொற்றால் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் – சமீபத்திய நிலவரங்கள்

ஐரோப்பாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000த்தை கடந்துள்ளது. இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ஒரு நாளைக்கு மட்டும் 800-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன.

பனாமாவின் ''சாந்தாம்'' என்ற சொகுசு கப்பலில் இருந்த 1,800 பயணிகளில் நான்கு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா பாதிப்பு இன்றி நல்ல உடல் நிலையுடன் இருப்பவர்கள்வேறு கப்பலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது நல்ல அறிகுறியாக தென்படுகிறது என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் புதிதாக 68 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கிறது

கொரோனா வைரஸ் – சமீபத்திய நிலவரங்கள்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலே மரணம்தானா?

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர்.

கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் இடையே இருக்கும் இறப்பு விகிதம், ஒட்டு மொத்த இறப்பு விகிதம் கிடையாது வைரஸ் தொற்று இருக்கும் பலர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாது.

ஏனெனில் லேசான அறிகுறிகள் இருக்கும் பலரும் மருத்துவர்களிடம் செல்வது கிடையாது.

நியூயார்க் நகரத்தை முடக்குவது குறித்து அதிபர் டிரம்ப் ஆலோசனை?

நியூயார்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

இந்த வைரஸ் தொற்றின் மையமாக நியூயார்க் இருப்பதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்நகரத்தை தனிமைப்படுத்துவது குறித்து சிந்திப்பதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், இதில் நியூயார்க்கில் மட்டும் 52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

ஆனால், அதிபர் டிரம்பின் இந்த யோசனையை நியூயார்க் ஆளுநர் கடுமையாக விமர்சித்தார். இது ''விபரீதமானது'', ''அமெரிக்காவிற்கு எதிரானது'', ''போர் அறிவிப்பு போன்றது'' என்று நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு தெரிவித்தார்.

நியூயார்க்கில் ஏற்கனவே மக்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் கூறியுள்ளார். எனவே அந்நகரை முழுமையாக முடக்குவதற்கு ஆளுநர் ஆண்ட்ரு எதிர்ப்பு தெரிவித்தார்.

"நியூயார்க்கிற்கு முழுமையாக தடை விதித்தால், சீனாவின் வுஹான் போல நாம் ஆகிவிடுவோம், இதனால் எந்த பலனும் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் எதிர்பார்க்காத அளவிற்கு பங்கு சந்தை வீழ்ச்சி அடையும், மீள முடியாத அளவிற்கு அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில்தான் நியூயார்க்கை முடக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வந்த அதிபர் டிரம்ப், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

டிரம்ப்

நிலைமை மேலும் மோசமாகும் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா வைரஸ் தொற்றால் பிரிட்டனில் நிலைமை மேலும் மோசமாக உள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன், தேவைப்பட்டால் பிரிட்டனில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் பிரிட்டனில் இதுவரை 17,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவிட்டது.

இது தொடர்பாக30 மில்லியன் மக்களின் வீட்டிற்கு கடிதம் அனுப்பிய பிரதமர், “தொடக்கத்தில் இருந்தே சரியான நேரத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மேலும் நடவடிக்கை எடுக்க எந்த தயக்கமும் இருக்காது” என்று எழுதியிருந்தார்.

மேலும் அந்த கடிதத்தில், “உங்களிடம் நான் இதனை சொல்வது முக்கியம். நிலைமை மேலும் மோசமாகும். ஆனால், நாங்கள் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். நாம் எவ்வளவு அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறோமா, அவ்வளவு குறைவான உயிரிழப்புகள் நேரும். விரைவில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும்” என்று போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி