அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் பத்தாயிரம் அதிகரித்துள்ளது.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான்.

இதன் மூலம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,132 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1031 ஆகவும் அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது.

இதே சூழ்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,030 என்னும் புதிய உச்சத்தை தொட்டிருப்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு காட்டுகிறது.

அதிகபட்சமாக இத்தாலியில் 7,503 பேரும் ஸ்பெயினில் 4,089 பேரும் இந்த நோய்த்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் 3,169 பேரும் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுத்தளம் கூறுகிறது.

நோய்த்தொற்றை பொறுத்தவரை, அதிகபட்சமாக சீனாவில் 81,782 பேரும், இத்தாலியில் 74,386 பேரும் அமெரிக்காவில் 69,197 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் 4000-ஐ கடந்த பலி எண்ணிக்கை

ஸ்பெயினில் இப்போதைய நிலவரப்படி இன்று ஒரு கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 665ஆக உள்ளது.

இதனால் இதுவரை ஸ்பெயினில் கோவிட்-19 தொற்றால் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கை 4,089 ஆகியுள்ளது.

இது புதன்கிழமை உயிரிழந்தோரைவிட குறைவானது. புதனன்று உயிரிழந்தோர் 738. கொரோனாவால் தாக்கப்பட்டவர் என உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,188.

தலைநகர் மேட்ரிட் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆனால் கேட்டலோனியாவில் 11,592 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று பரவுவதை தவிர்க்க நேற்று இரவு முதல் ஏப்ரல் 12 வரை ஸ்பெயின் நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்தது.

இன்று (மார்ச் 26) இந்திய நேரம் மாலை 05 மணி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 4,87,648 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,17,749 பேர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக அந்த தரவு கூறுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருந்துவந்த இந்திய சமையல்கலை நிபுணரான ஃபிலாய்ட் கார்டோஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.

நியூ ஜெர்ஸி மருத்துவமனையில் இறந்த அவருக்கு, சிறந்த உணவை அளித்தவர் என்ற வாசகங்களுடன் எண்ணற்ற உணவுப்பிரியர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் ஃபிலாய்ட் கார்டோஸ் குறித்து சமூகவலைதளங்களில் அதிக அளவில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் நிலை என்ன?

கோப்புப்படம்

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் கொரோனா வைரஸுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இன்று அறிவித்துள்ளன.

நியூசிலாந்து இதுவரை கிட்டதட்ட 300 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாடு முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றியமையாத பணிகளை மேற்கொள்பவர்கள் மட்டுந்தான் வீடுகளை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) ஃபேஸ்புக் நேரலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன், மக்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் நேரலையிலேயே பதிலளித்தார்.

2,600க்கும் மேற்பட்ட நோய்த்தொற்று பாதிப்புகளும், 11 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில் இதுவரை நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்படவில்லை. எனினும், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் எத்தனை பேர் பங்கேற்கலாம் உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் அனைத்து பொது இடங்கள், தொழில் நிறுவனங்களை மூட உத்தரவிடாத பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு எதிராக பலரும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற நாடுகளின் நிலவரம் என்ன?

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் மற்ற நாடுகளுக்கும் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், இந்த பெருந்தொற்று நோயின் மையாக ஐரோப்பிய நாடுகள் விளங்குகின்றன.

குறிப்பாக, உலகிலேயே அதிகபட்சமாக கோவிட்-19 நோய்த்தொற்றால் இத்தாலியில் இதுவரை 7,503 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தேவாலயங்களின் பாதிரியார்கள் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், இத்தாலியில் இன்றியமையாத பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என்றும், மக்கள் நிதானமாக கடைகளில் பொருட்களை வாங்கி செல்வதாகவும் கூறுகிறார் அங்குள்ள பிபிசி செய்தியாளர் மார்க் லோவென். “டிராம் வண்டிகள், பேருந்துகள் இன்னமும் இயங்குகின்றன. ஆனால், அவை பெரும்பாலும் காலியாக இருக்கின்றன. உலக புகழ்ப்பெற்ற சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு ஐரோப்பிய நாடான பிரான்சில் இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 25,000க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. “நடைப்பயிற்சி செல்பவர்கள் தங்களது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு மேல் செல்ல கூடாது. அதே போன்று, ஒரு நாளில் மணிநேரத்துக்கு மேல் வெளியே சென்றால் காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். இதுபோன்று விதிமுறைகளை அடிக்கடி மீறுபவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது” என்று கூறுகிறார் அங்குள்ள பிபிசி செய்தியாளர் லூசி வில்லியம்சன்.

“நான் சில வாரங்களுக்கு முன்புதான் இத்தாலியில் இருந்து ஆஸ்திரியாவுக்கு திரும்பினேன் என்பதால் தற்போது இரண்டு வாரகால கட்டாய சுய தனிமைப்படுத்துதலில் உள்ளேன். வீட்டிற்கு தேவையான உணவுப்பொருட்களை இணையத்தளத்தில் வாங்கலாம் என்று பார்த்தால் அடுத்த பல நாட்களுக்கு முன்பதிவு முடிந்துவிட்டது. எனவே, நண்பர்களின் உதவியை நாடியே இருக்கிறேன்” என்று கூறுகிறார் அங்குள்ள பிபிசி செய்தியாளர் பெத்தானி பெல்.

ஸ்பெயினில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 738 பேரும் இதுவரை மொத்தம் 3,434 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில், இத்தாலிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.

ரஷ்ய அதிபர் பதவியில் விளாடிமிர் புதின் தொடர்ந்து நீடிப்பதற்கு வகை செய்யும் அரசமைப்பு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் வாக்கெடுப்பு வரும் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதுவரை 658 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி