உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடக்குமா நடக்காதா என்பது ஏறக்குறைய வடிவேலுவின் ஜோக்கை போல் ஆகிவிட்டது.

“வரும் ஆனா வராது”? இதில் பொதுவாக ஒரு அபிப்பிராயம் உண்டு.அரசாங்கம் தேர்தலை நடாத்த விரும்பவில்லை என்று. அது உண்மை. ஏனென்றால் இப்போது இருக்கும் அரசாங்கம் ஒற்றை யானையால் தலைமை தாங்கப்படும் தாமரை மொட்டுக்கள் உடையது. ஒரு தேர்தல் நடந்து அதில் தாமரை மொட்டு மக்கள் ஆணையை இழந்து விட்டது என்று தெரிய வந்தால், அது அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது முன்னெடுத்துவரும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நகர்வுகளையும் பாதிக்கும். எனவே பொதுப்படையாக பார்த்தால், ஒரு தேர்தலை நடாத்த இந்த அரசாங்கம் விரும்பாது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு அமில பரிசோதனையாக அமையக்கூடும்.

ஆனால் இங்கே முக்கியமான ஒரு சிறு வேறுபாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டும். இப்போது இருக்கும் அரசாங்கம் ஒரு நூதனமான சேர்க்கை. தேர்தல் அரசியலில் பாரம்பரிய எதிரிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகள் தங்களுக்கு இடையே ஒரு சுதாகரிப்புக்கு வந்திருக்கின்றன. இந்த கூட்டிணைவு தன்னெழுச்சிப் போராட்டங்களுக்கு எதிரானது. தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஏற்பட்ட ஆபத்துக்கள், அச்ச உணர்வு போன்றவற்றின் விளைவாக இரண்டு பாரம்பரிய எதிரிகளான கட்சிகள் ஒரு தந்திரபாயச் சேர்க்கைக்கு போயிருக்கின்றன. ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், ஒற்றை யானையாகிய ரணிலைப் பொறுத்தவரை அவர் ஏற்கனவே மக்கள் ஆணையை இழந்தவர். அவரைப் பொறுத்தவரை இனி ஒரு தேர்தல் நடந்து அதில் அவருக்கு மக்கள் ஆணை இல்லை என்பதனை கண்டுபிடிக்க வேண்டிய தேவை இல்லை.

ஆனால் தாமரை மொட்டுக்களின் நிலைமை அப்படியல்ல. அரகலயவுக்கு முன்பு தாமரை மொட்டானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தது.ஆனால் அரகலயவுக்குப் பின் அந்த மக்கள் ஆணை கேள்விக்குள்ளாகிவிட்டது. ஒரு தேர்தல் அதை நிரூபிக்கக்கூடும். அது தாமரை மொட்டுக்கு எதிரான மக்களாணையாக அமைந்தால் அது தாமரை மொட்டுக்களை அதாவது தாமரை மொட்டுக்கள் பெரும்பான்மை வகிக்கும் நாடாளுமன்றத்தைப் பாதிக்கும்.எனவே தாமரை மொட்டுக்களைப் பொறுத்தவரை தங்களுக்கு மக்களாணை உண்டா இல்லா இல்லையா என்பதனை பரிசோதிக்கும் ஒரு தேர்தலை எதிர்கொள்ள அஞ்சக்கூடும். அதாவது இதில் ஒப்பீட்டளவில் அதிகம் ஆபத்து தாமரை மொட்டுக்களுக்குத்தான் உண்டு.

ஆனால் ரணிலைப் பொறுத்தவரை, ஒரு தேர்தல் நடந்தால் அதில் தாமரை மொட்டுக்கு மக்கள் ஆணை இல்லை என்று கண்டால் அது தாமரை மொட்டுக்களை மேலும் பலவீனப்படுத்தும். அதன்மூலம் தாமரை மொட்டுக்கள் மேலும் ரணிலுக்கு கீழ்ப்படிவு உள்ளவர்களாக மாறுவார்கள். கடைசியாகச் செய்த யாப்பு திருத்தத்தின்படி ரணில் இப்பொழுது இருக்கும் நாடாளுமன்றத்தை வரும் மார்ச் மாதத்தோடு கலைக்கலாம். அந்த ஏற்பாடும் ரணிலுக்கு பலமானது. அது தாமரை மொட்டுக்களை அவரில் தங்கியிருக்கச் செய்யும். இந்நிலையில் ஒரு தேர்தல் நடந்து அதன் முடிவுகளும் தாமரை மொட்டுகளை பலவீனப்படுத்தினால், பலவீனமான தாமரை மொட்டுக்களின் அரசாங்கத்தை வைத்துக்கொண்டு ரணில் தன்னுடைய ஆட்சிக் காலத்தை முடிக்கலாம். நாடாளுமன்றத்துக்கு மக்கள் ஆணை இல்லை என்று தெரிய வந்தால் ரணிலுக்கு அது அதிர்ச்சியாக இருக்காது. அவர் ஏற்கனவே மக்கள் ஆணையை இழந்தவர்.

ஆனால் தேர்தல் முடிவுகளால் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிப்படைந்தால், அது அவருடைய திட்டங்களைக் குழப்பக்கூடும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம்.அனைத்துலக நாணய நிதியத்தின் உதவி கிடைப்பதற்கு அது அவசியம். அனைத்துலக நாணய நிதியத்தின் கடனுதவி இதோ வருகிறது என்று அவர் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது வந்தபாடாக இல்லை. வரும் மார்ச் மாதம் அது கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஒரு சிறிய தொகை. ஆனால் அப்படி உதவி கிடைத்தால், ஏனைய தரப்புகளிடம் கடன் வாங்குவதற்கான அங்கீகாரத்தை அரசாங்கம் பெற்றுவிடும். எனவே பொருளாதார நெருக்கடியை கடப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம்.ஒரு தேர்தல் நடந்து அதனால் அரசியல் ஸ்திரத்தன்மை குழம்புமாக இருந்தால், அது ரணிலுக்கு கூடாது. அவர் அந்த கோணத்தில்தான் சிந்திப்பார். அதே சமயம் தாமரை மொட்டுக்கள் மேலும் பலவீனம் அடைவதை அவர் ரசிப்பார்.அது அவருடைய பேரத்தைக் கூட்டும். எனவே ஒரு தேர்தல் நடக்கக் கூடாது என்ற கவலையும் பயமும் தாமரை மொட்டுக்குத்தான் அதிகம்.

உள்ளூராட்சி தேர்தல் எனப்படுவது உள்ளூர் நிலவரங்களைப் பிரதிபலிப்பது, எனவே அது தேசிய அளவில் கட்சிகளின் வெற்றி தோல்விகளை பிரதிபலிக்காது என்று ஒரு வாதம் உண்டு. அதில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு. நாட்டின் உள்ளூராட்சி தேர்தல் பாரம்பரியத்தைப் பொறுத்தவரை மக்கள் உள்ளூர் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே வாக்களிக்கிறார்கள். இங்கு கட்சிகளை விடவும் குறிப்பிட்ட “லோக்கல் லீடரின்” உள்ளூர் செல்வாக்கே வெற்றியை அதிகம் தீர்மானிக்கின்றது. அதனால்தான் முன்பு ஒரு கட்சியின் கீழ் வாக்கு கேட்டவர் இப்பொழுது இன்னொரு கட்சியில் துணிந்து வாக்குக் கேட்கிறார். ஏனென்றால் அவருக்குத் தெரியும், வாக்குகள் கட்சிகல்ல, தன் முகத்துக்குத் தான் கிடைக்கின்றன என்று. இவ்வாறு உள்ளுராட்சி தேர்தல் எனப்படுவது உள்ளூர் நிலைமைகளை-அதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் – உள்ளூர் ஏற்றத்தாழ்வுகளை, சாதி,சமய, சமூக வேறுபாடுகள் போன்ற எல்லாவற்றையும் பிரதிபலிப்பது.அதில் கட்சி நிலைப்பாடு என்பது ஒப்பிட்டுளவில் இரண்டாம்பட்சம் என்று ஒரு வாதம் உண்டு.ஆனாலும் இறுதியிலும் இறுதியாக தேசிய அளவில் வாக்களிப்பைக் கணிக்கும் பொழுது அங்கே அது கட்சிகளின் வெற்றி தோல்வியாகவே பார்க்கப்படும்.

அப்படி சிந்தித்துத்தான் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ரணில் – மைத்திரி அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தல்களை 20 மாதங்களுக்கு ஒத்திவைத்தது. 2015ல் ரணில்+மைத்திரி கூட்டு வெற்றி பெற்றது. ஆனால் அதையடுத்து நடந்த கூட்டுறவு சபைகளுக்கான தேர்தலில் ராஜபக்சங்கள் பலமாக இருப்பது தெரிய வந்தது.கூட்டுறவு சபைத் தேர்தல்களும் ஏறக்குறைய உள்ளூராட்சி சபை தேர்தல்களைப் போலத்தான், உள்ளூர் நிலவரங்களை பிரதிபலிக்கின்றன. எனினும், அத்தேர்தலில் ராஜபக்சக்கள் பெற்ற வெற்றியானது அதற்கு முன் ரணில் + மைத்திரி கூட்டு பெற்ற வெற்றியை கேள்விக்குள்ளாக்கியது. ராஜபக்சக்கள் தொடர்ந்தும் பலமாக இருக்கிறார்கள் என்பதனை அது உணர்த்தியது. அதனால் ரணிலும் மைத்திரியும் உள்ளூராட்சி தேர்தல்களை மேலும் 20 மாதங்களுக்கு குறையாமல் ஒத்திவைத்தார்கள். ஆனால் 2018 இல் தேர்தல்களை நடாத்திய பொழுது, மீண்டும் ராஜபக்சக்களே வெற்றி வாகை சூடினர். நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட கூட்டுக்கு கிடைத்த மக்கள் ஆணை காலாவதியாகிவிட்டது என்பது தெரியவந்தது. அதன் விளைவாக மைத்திரிபால சிறிசேன தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொண்டார்.அவர் ராஜபக்சக்களின் கருவியாக மாறி ஒரு யாப்புச்சதிப் புரட்சியைச் செய்தார்.

எனவே உள்ளூராட்சி சபைத் தேர்தலோ அல்லது கூட்டுறவு சபைத் தேர்தலோ எதுவானாலும், அது அதிகபட்சம் உள்ளூர் நிலைமைகளை பிரதிபலித்தாலும் இறுதியிலும் இறுதியாக கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் என்று பார்க்கும் பொழுது தேசிய அளவில் அது கட்சிகள் பெற்ற வெற்றி தோல்விகளாகவே பார்க்கப்படும். அதனால்தான் யானை+தாமரை மொட்டுக் கூட்டு ஆனது தேர்தல்களை எப்படியாவது ஒத்தி வைக்கலாமா என்று அகக்கூடிய மட்டும் முயற்சிக்கும். ஆனால் தாமரை மொட்டுக்கள் இழந்த செல்வாக்கை கட்டியெழுப்புவதற்கு பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டும். அவ்வாறு பொருளாதாரத்தை நிமிர்த்தித் தேர்தலை நடத்தத் தேவையான நிலைமைகள் அடுத்த வருடமளவிலேயே உருவாகும் என்று ரணில் கூறியிருக்கிறார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஆனால் அடுத்த ஆண்டுக்குள் பொருளாதாரத்தை நிமிர்த்தலாம் என்று எந்தச் ஜோதிடர் சொன்னார்?

நன்றி இணையம் - நிலாந்தன்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி