தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் பெண் வாக்காளர்களை மையமாக வைத்து வாக்குறுதிகளை அள்ளிவழங்கும் அரசியல் கட்சிகள், பெண் வேட்பாளர்களை களத்தில் அதிகளவில் முன்னிறுத்துவதில்லை. பலமான இரண்டு திராவிட கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகள், பெண்களின் வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டு கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றன. அவை யதார்தத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில்லை என்ற கருத்தை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில், பெண் வேட்பாளர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ததில், நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் 117 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து தனது வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறது.

இதேவேளை, பிரதான கட்சிகளான அதிமுக 14 பெண்களுக்கும், திமுக 12 பெண்களுக்கும் வாய்ப்பளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு கிடைத்த ஆறு தொகுதிகளில் ஒன்றில் பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

இதில் எத்தனை பெண்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாவார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தொடங்கி, பெண்களுக்கு 33 சதவீதத்தை தேர்தல் காலங்களில் கூட வழங்காத கட்சிகளே இந்தியாவில் அதிகம் என்ற நிலை உள்ளது.

1920ல் பிரிட்டிஷ் இந்தியாவிற்கு முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துலட்சுமி ரெட்டியை வழங்கிய தமிழகத்தில், தற்போதும் சட்டப்பேரவையில் பெண்களின் பங்கேற்பு 50 சதவீதத்தைக் கூட எட்டவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

2016 சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 உறுப்பினர்களில், முதல்வர் ஜெயலலிதா உட்பட 24 பெண் உறுப்பினர்கள் இருந்தனர். 2011ல் அந்த எண்ணிக்கை 17ஆக இருந்தது. இது, தமிழகத்தில் பெண்களின் அரசியல் பங்கேற்பை தடுக்கும் காரணிகள் என்ன என்றும் சட்டப்பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது எப்படி என்பதையும் விவாதிக்கத் தூண்டுகிறது.

கடந்த வாரம், தமிழக சட்டப்பேரவையில் பாலின சமத்துவம் இல்லை என்றும், சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் கோரி மனிதி என்ற அமைப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசுதான் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

சட்டப்படி மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்றபோதும், நடைமுறையில், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் எந்த விதத்தில் பெண்களுக்கு வாய்ப்புகளை தர வேண்டும் என்பது பேசுபொருளாகியிருக்கிறது.

பெண்கள்

"கடந்த 30 ஆண்டுகளில் பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்த தமிழகத்தில் ஆளும் கட்சிகள், அவர்களை பயனாளிகளாக மாற்றிவிட்டது என்றும் அரசியல் தளத்தில் பங்கேற்பதற்காக சூழலை ஊக்குவிக்கவில்லை," என்கிறார் ஆராய்ச்சியாளர் ஆனந்தி.

சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறித்த ஆய்வுகளை நடத்தியவர் ஆனந்தி.

''ஒவ்வொரு அரசாங்கமும் குடும்ப அமைப்புக்கு தேவையான பொருட்கள், உதவித்தொகை போன்றவற்றை அளித்ததோடு நிறுத்திக்கொள்கின்றன. பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அளித்து, பொது இடங்களில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கூட்டுக் குடும்ப அமைப்பு மாற்றம் பெற்று அதிக எண்ணிக்கையில் அதோடு நம் நாட்டில் 1990களில் தொடங்கிய சுதந்திர சந்தை பொருளாதாரம்(Free Trade Economy)தேவைகளை அதிகப்படுத்தி விட்டது. அத்துடன், கூட்டுக் குடும்ப அமைப்பு தனி குடும்பங்களாக மாறிவிட்டதால், ஒவ்வொரு தனி குடும்பத்திலும் பெண்களின் வேலைப்பளு கூடிவிட்டது. குடும்பத்திற்கான வேலைகளை செய்வது, பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு இலக்காக மாறிவிட்டது. அவர்களுக்காக அவர்கள் செலவிடும் நேரம் என்பது மிகவும் குறைவு. அரசியல் அமைப்புகளில் சேர்வது என்பது எட்டாக்கனியாக மாறி வருகிறது,''என்கிறார் அவர்.

அரசியல் கட்சிகளில் இணைந்துள்ள பெண்கள் கூட நேரடி அரசியல் பணிகளை பெரும்பாலும் மேற்கொள்ளவில்லை என்கிறார் அவர். ''சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும். ஏனெனில், பல கட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் எவ்வளவு பணம் செலவிடுவார் என்பது முக்கியமான கேள்வியாக கேட்கப்படுகிறது. குடும்பத்திற்காக மட்டுமே பணத்தை சேர்க்கும், செலவிடும் பெண்கள் தங்களுக்காக சேமிப்பது மிகவும் குறைவு. தேர்தலுக்கு செலவு செய்வது என்பது போட்டியிட விரும்பும் குடும்பத்தின் ஒப்புதலை பொறுத்துத்தான் இருக்கிறது. அதனால், பெண்கள் உறுப்பினர் என்ற நிலையில் நின்றுவிடுகிறார்கள். பொருளாதாரத்தின் உயர் வகுப்பில் இருக்கும் பெண்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பணம் செலவிடத் தயார் என்ற நிலையில்தான் பெண்கள் தேர்தலில் போட்டியிடமுடியும் என்ற நிலை உள்ளது,''என்கிறார் ஆனந்தி.

பெண்கள்

பெண் முதல்வரை கொண்டிருந்தபோதும் பெண்களின் எண்ணிக்கை சட்டமன்றத்தில் அதிகரிக்காதததிற்கு காரணம் என்ன என்று ஆனந்தியிடம் கேட்டோம்.

''ஜெயலலிதா பெண் முதல்வர் என்ற பட்டியலில் இருந்தாலும், அவர் பெண்களை பயனாளியாக பார்த்தார். அரசியல் களத்தில் பெண்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த பலமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அவர் முதல்வராக இருந்தபோது கூட பெண்களை அதிக பொறுப்புகள் கொண்ட துறைக்கு அமைச்சராக நியமிக்கவில்லை. ஜெயலலிதா மட்டுமல்ல, பிற தலைவர்களும், பெண்களுக்கு சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கைத்தறித்துறை அல்லது பிற அதிகாரமிக்க துறைகளில் அமைச்சராகும் வாய்ப்பை தரவில்லை என்பது வெளிப்படை. அரசியல் கூட்டங்களில் குவியும் பெண்கள், சட்டப்பேரவையில் தென்படுவதில்லை,''என்கிறார் அவர்.

தேர்தல்

திமுக மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்களிடம் ஆனந்தி பகிர்ந்த கருத்துகள் குறித்துப் பேசினோம்.

பெயர் சொல்ல விரும்பாத அவர்கள், அடிமட்ட தொண்டர்களுக்கு கட்சி வேலை என்பது எவ்வாறு இருக்கும் என்றும் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பு கானல் நீராக இருப்பதாக கூறுகிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் அதிமுக பெண் உறுப்பினர் ஒருவர் பேசும்போது அரசியலில் இருப்பதால் அவரது குடும்பத்தில் அவருக்கு மதிப்பில்லை என்கிறார்.

''எங்கள் மாவட்டத்தில் நகர பகுதியில் நடைபெறும் கூட்டங்களுக்கு பெண்களின் கூட்டத்தை நான் நிர்வகிக்கிறேன். பெரிய வருமானம் கிடையாது. குடும்பத்தில் மதிப்பு இல்லை. கட்சியில் நமது உழைப்பு தேவைப்படும் அளவுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருக்கிறேன். ஆண்களுக்கு இணையாக என்னைப் போன்ற பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் கூட வாய்ப்பு கிடைக்காது என்பதால், சட்டமன்ற தேர்தல் போன்றவற்றை நாங்கள் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. கனவில் கூட நடக்காது. கட்சியில் இருக்கிறோம் என்பதால் பிரச்சினைகள் வந்தால் பாதுகாப்பு கிடைக்கும் என்பதால் நான் கட்சியில் இருக்கிறேன்,''என்கிறார் அவர்.

திமுகவில் செயலாற்றிவரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் அவரது தந்தை காலம் முதல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்சி உறுப்பினராக இருப்பதாக கூறுகிறார்.

''எங்கள் குடும்பத்தில் என் பெற்றோர். சகோதரன், நான் என எல்லோரும் கட்சியில் இருக்கிறோம். ஆனால் எங்கள் அப்பா மற்றும் சகோதரன் கட்சி பணிகளில் ஈடுபடும் அளவுக்கும், நானும் அம்மாவும் அரசியல் பணியில் ஈடுபடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அவர்கள் செல்லும் எல்லா கூட்டங்களுக்கும் நாங்கள் செல்லமுடியாது. அதிகபட்சமாக பெண்கள் தினம் அல்லது பெண்கள் தொடர்பான போராட்டம் என்றால் நாங்கள் கட்டாயமாக வரவேண்டும் என்பார்கள். தேர்தல் நேரத்தில் பிரச்சாரக்கூட்டங்களுக்கு செல்வோம். பெரிய தலைவர்கள் வந்தால் கூட்டத்திற்கு செல்வோம். மற்றபடி, கட்சி விவகாரங்கள் பற்றியோ, தேர்தலில் பங்கெடுப்பது பற்றி யோசித்தது இல்லை,''என்கிறார்.

பெண்கள்

எழுத்தாளர் இமையம் எழுதிய 'வாழ்க வாழ்க' என்ற கதையில் மாற்றுத்திறனாளி குழந்தையின் மருத்துவச் செலவுக்காக சிரமப்படும் ஏழை பெண் ஒருவர் அரசியல் கூட்டத்திற்கு வருவார். கூட்டத்திற்கு வந்தால் பணம் தரப்படும் என்பதால் அரசியல் கூட்டத்திற்கு அவர் வந்திருப்பார். அந்த கூட்டத்தில் வந்திருக்கும் பெண்கள் பலருக்கும் அந்த ஒரு நாள் விடுமுறை தினம் போல இருக்கும். இதுபோன்ற நிஜ கூட்டங்கள் பலவற்றை மையமாக வைத்துத்தான் கதையை புனைந்ததாகக் கூறுகிறார் எழுத்தாளர் இமயம்.

''அந்த கூட்டத்தில் எல்லாம் வெளிப்படையாக பகல் பொழுதில் நடக்கும். பெண்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். பேருந்தில் வருகிறார்கள். அவர்களுக்கு புது சேலை, உணவு, பணம் கிடைக்கிறது. ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியாக பேசிக்கொள்கிறார்கள். வீட்டு வேலையில் இருந்து நீங்கி ஒரு சில மணிநேரம் ஓய்வு அவர்களுக்கு கிடைக்கிறது. அந்த கூட்டத்தில் புதிய நட்பு. காதல் என பலவற்றுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. என்னை பொறுத்தவரை லட்சக்கணக்கவர்கள் வரும் கூட்டத்திற்குப் பெண்கள் வருகிறார்கள், அவர்கள் குடும்பமும் அனுமதிக்கிறது என்பது ஒரு சமூக மாற்றம் என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் பணம் கொடுக்கப்பட்டதால் வருகிறார்கள் அல்லது இலவசமாக அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள் என்பத்தைத்தாண்டி, பல காலமாக அரசியல் கூட்டங்களில் பெண்களின் தலைகள் அதிகமாக தென்பட்டதில்லை. தற்போது பெண்கள் கூட்டம் கூட்டமாகப் போகிறார்கள் என்பது ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கிறேன்,''என்கிறார் இமையம்.

குடும்பத்தோடு உணர்வுபூர்வமாகக் கொண்டிருக்கும் உறவு என்பது பெண்களுக்கு அரசியல் ஈடுபாடு இருந்தாலும், அவர்களை குடும்பத்தை நோக்கியே தள்ளுவதாக கூறுகிறார் பத்திரிகையாளர் மற்றும் ஆய்வாளர் ராமஜெயம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகவிலக்கம் மற்றும் சேர்த்தல் கோட்பாடு ஆய்வு மையத்தில் தமிழக சமூக அரசியல் பிரச்னைகள் தொடர்ந்து ஆய்வுகளுக்கு உட்படுத்துகிறார் ராமஜெயம்.

''அரசியலில் பங்கெடுப்பது என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களாக இருந்தாலும் சுலபமான வழியாக தற்போது இல்லை. ஒரு கட்சியில் சேர்ந்து, பணியாற்றி, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது என்பது எளிதாக சாத்தியமில்லை என்ற சூழலில்தான் நாம் இருக்கிறோம். பெண்கள் தொடபாளர்களாக இருப்பதுவரை சரி. அவர்கள் தலைவர்களாக அல்லது தேர்தலில் போட்டியிடுவது என்பது முதலில் அவர்களின் குடும்பத்தின் விருப்பம், சாதி,பொருளாதார நிலையை பொறுத்தது. குடும்ப பின்னணி கொண்ட பெண்கள்தான் போட்டிக்கு வரமுடியும். தேர்தலுக்கு வருபவர்கள் அதிகபட்சமாக, உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்லது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். குடும்ப பின்னணி அல்லாத பெண்களுக்கு பெரிய கட்சிகளில் வாய்ப்பு அளிக்கப்படுவது அரிதாக இருக்கிறது,''என்கிறார் அவர்.

மாற்றம் கொண்டு வர என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது, ''அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டால் அன்றி பெண்களுக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்றம் போன்ற தளங்களில் வாய்ப்பு கிடைப்பது சிரமம்தான். தொடக்கத்தில், ஆதிக்கம் செலுத்தும் தலைவர்களின் மனைவி அல்லது மற்ற பெண் குடும்ப உறுப்பினர் வருவதற்கு வழிவிடுவார்கள். மாற்றம் நிகழ காலம் அதிகமாக தேவைப்படும் என்றாலும், அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களின் பங்கேற்பு அதிகமாகியுள்ளதால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாம் பார்க்கிறோம். அதேபோல சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்திலும் மாற்றம் வரவேண்டும்,'' என்று வலியுறுத்துகிறார் ஆய்வாளர் ராமஜெயம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி